புதுடில்லி: "டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை, ரகசியமாக நடத்தவும், இது தொடர்பான செய்திகளை வெளியிட, மீடியாக்களுக்கு தடை விதித்தும், மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, சரியானது தான்' என, டில்லி செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி, ஆறு பேர் அடங்கிய வெறிக் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சிலிருந்து, தூக்கி வீசப்பட்டார்; சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் வளாகத்திலும், விசாரணை நடந்த கோர்ட் அறையிலும், பார்வையாளர்கள் ஏராளமாக கூடியிருந்தனர். வக்கீல்கள், மீடியாக்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டதால், குற்றவாளிகளை ஆஜர் படுத்துவதில், பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி போலீசாரின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, மூடப்பட்ட அறையில், ரகசியமாக நடத்தவும், இந்த வழக்கு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு, மீடியாக்களுக்கு தடை விதித்தும், மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, டில்லியைச் சேர்ந்த வக்கீல்கள், டி.கே.மிஸ்ரா, பூனம் கவுசிக் ஆகியோர், டில்லி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், அவர்கள் கூறியிருந்ததாவது: இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை, ஒட்டு மொத்த நாடும், கூர்ந்து கவனித்து வருகிறது. வக்கீல்கள் மற்றும் மீடியாக்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டிருப்பது குறித்து, மாஜிஸ்திரேட் கவலை தெரிவித்துள்ளார். அவர்கள், நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனவே, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த, மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, டில்லி செசன்ஸ் கோர்ட்டில், நீதிபதி, ஆர்.கே.குப்தா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விசாரணை நடந்த கோர்ட் அறைக்குள், பெருமளவு கூட்டம் இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்களை, அங்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் தான், விசாரணையை ரகசியமாக நடத்த, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில், ரகசிய விசாரணைக்கு உத்தரவிடலாம். இதற்கான உரிமை, அந்த வழக்கை விசாரிக்கும், மாஜிஸ்திரேட்டுக்கு உள்ளது. எனவே, டில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை, ரகசியமாக நடத்தவும், மீடியாக்களுக்கு தடை விதித்தும், மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, சரியானதே.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
"ரகசியம் கூடாது'
இதற்கிடையே, "இந்த வழக்கின் விசாரணை தொடர்பான தகவல்கள், அனைத்து தரப்பினருக்கும் தெரிய வேண்டும். எனவே, இந்த விசாரணையை ரகசியமாக நடத்தக் கூடாது' என, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.