உத்தமபாளையம்: சின்னமனூரில் உரக்கடை உரிமையாளரைக் கடத்திச் சென்று, 8 கோடி ரூபாய் கேட்டு, மிரட்டிய கும்பலிடம் இருந்து தப்பி, 7 கி.மீ., ஓடியே வந்து, போலீசாரிடம் அவர், புகார் செய்தார். தேனி மாவட்டம், சின்னமனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 38. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் இதே ஊரில் உரக்கடை நடத்தி வருகிறார்.
விவசாய தொழில்நுட்ப ஆலோசகராகவும் உள்ளார். நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், இவர் கடைக்கு வந்துள்ளனர். தாங்கள் உ. அம்மாபட்டியை சேர்ந்தவர்கள் என்றும், தோட்டத்தில் உள்ள வாழையில் நோய் தாக்கியுள்ளதாகவும், அதற்கு ஆலோசனை வழங்க வருமாறும் அழைத்துள்ளனர்.
நாளை வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார். உடனே வருமாறு வற்புறுத்தி, அழைத்து சென்றுள்ளனர். சுமோ காரில் அழைத்து சென்றுள்ளனர். உ. அம்மாபட்டி ரோட்டில் செல்லாமல், உத்தமபாளையம் ரோட்டில் கார் சென்றதால், "ஏன் வேறு பாதையில் செல்கிறீர்கள்?' என, ராஜேஷ் கேட்டுள்ளார். பதில் கூறவில்லை.
வேம்படி களம் அருகில், மேலும் இரண்டு நபர்கள், காரில் ஏறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அக்கும்பல், கத்தியை காட்டி மிரட்டியது. அவரிடமிருந்த, ஒரு செயின், தலா, இரண்டு தங்கம், வெள்ளி மோதிரங்கள் உள்பட, 8 பவுன் நகைகள், மூன்று மொபைல்கள், 4 ஏ.டி.எம். கார்டுகள், 1,000 ரூபாய் பணம் அனைத்தையும், பறித்துக் கொண்டனர். பின், அவர் கண்களை துணியால் கட்டி, கம்பம் சென்றுள்ளனர். இரவு, 11:00 மணிக்கு அனுமந்தன்பட்டி வழியாக, மலையடிவாரத்தில் உள்ள நாகம்மாள் கோயில் பகுதிக்கு சென்றனர். அங்கு ராஜேஷை இறக்கி, கட்டிப் போட்டனர். பின், மது அருந்தி விட்டு, "உன்னிடம் உள்ள சொத்துக்கள் குறித்து எங்களுக்கு தெரியும். எங்களுக்கு, 8 கோடி ரூபாய் கொடுத்துவிடு. உன்னை விட்டு விடுகிறோம். இல்லை எனில் கொன்று விடுவோம்' எனக்கூறி மிரட்டியுள்ளனர். நீண்ட நேர மிரட்டல், துன்புறுத்தலுக்கு பின்னர் 25 லட்சம் ரூபாய் கொடுக்க ராஜேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதற்குள் அதிகாலை 2 மணியானதால், இருவரை மட்டும் காவலுக்கு வைத்துவிட்டு போதையில் டிரைவர் உட்பட மூன்று பேரும் தூங்கியுள்ளனர். காவலுக்கு நின்ற இருவரும் போதையுடன் தூக்க கலக்கத்தில் இருந்ததால், ராஜேஷ் அவர்களை தள்ளிவிட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இருட்டில் மலையடிவாரத்திலிருந்து, இரண்டு மணி நேரம், 7 கி.மீ., தூரம் ஓடியே வந்துள்ளார். அதிகாலை, 5:00 மணியளவில் அனுமந்தன்பட்டி ஊருக்குள் ஒரு வாழை தோப்பில் காலில் காயம் பட்ட நிலையில் மயங்கி விழுந்த அவருக்கு, தோட்டத்தில் இருந்தவர்கள் உதவினர். உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி.,ஸ்டேன்லி, இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.