சோமனூர்: தடையில்லாத மின்சாரம் வழங்கவும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் விசைத்தறியாளர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தை நேற்று துவக்கியுள்ளனர். இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சோமனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. லட்ணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர். கடந்த பல மாதங்களாக தொடரும் மின் வெட்டால் விசைத்தறி தொழில் முடங்கி வருகிறது. இதனால், மாதந்தோறும் பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண உயர்வை அறிவித்தது. விசைத்தறி தொழிலுக்கு முன்பிருந்த தனி "டேரிப்' மற்றும் "ஸ்லாப்' சிஸ்டத்தை ரத்து செய்து, புதிய கட்டணத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசின் கவனம் தேவை: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. தினமும் 16 மணிநேர மின்வெட்டு, அதிகப்படியான மின் கட்டண உயர்வால் விசைத்தறியாளர்கள் விசைத்தறிகளை தொடர்ந்து ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். டீசல் விலை உயர்வால், ஜெனரேட்டர் மூலம் விதைத்தறிகளை இயக்கினால் கடுமையான நஷ்டம் ஏற்படும் என்பதால் அதையும் தவிர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் எதாவது ஒரு பிரச்னையால் விசைத்தறிகள் இயக்கம் பாதிக்கப்பட்டு, உற்பத்தி இழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. விசைத்தறி தொழிலை பாதுகாக்க அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்பது விசைத்தறியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐந்து நாட்கள் ஸ்டிரைக்: இந்நிலையில், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் அரசு தலையிட்டு, உடனடி தீர்வு காணவேண்டும் எனக்கோரி, விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் ஐந்து நாள் வேலை நிறுத்தத்தை துவக்கினர். இதனால், சோமனூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் அடைக்கப்பட்டிருந்தன. தறிகள் ஓடாததால் குடோன்களை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது: விசைத்தறி தொழிலுக்கு உயிர்நாடியான மின்சாரம் தற்போது பற்றாக்குறையில் உள்ளது. ஆனால் மின்கட்டணம் மட்டும் அதிகமாக உள்ளது. தொடர் மின் வெட்டால், உற்பத்தி இழப்பும், தொழிலாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது. தொழிலை நடந்த முடியாமல் திண்டாடும் சூழலில், 110 சதவீத அளவிற்கு மின் கட்டணம் என்பது எங்களால் தாங்கமுடியாது. அதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.