Notice to university | யானை வழித்தடப் பகுதியில் அடுக்குமாடி கட்டடங்கள் : நகரமைப்புத்துறை நோட்டீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை வழித்தடப் பகுதியில் அடுக்குமாடி கட்டடங்கள் : நகரமைப்புத்துறை நோட்டீஸ்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

யானைகள் வழித்தடத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டியதாக, பிரபல தனியார் பல்கலை, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட, 15 நிறுவனங்களுக்கு நகரமைப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சி.எம்.டி.ஏ., எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகளில் நகரமைப்பு சட்டத்தை அமலாக்குவதற்காக, இத்துறை (டி.டி.சி.பி.,), மண்டல இயக்குனர் அலுவலகங்கள், உள்ளூர் திட்டக் குழுமங்கள், புதுநகர் வளர்ச்சி குழுமங்கள், மலைப்பகுதி பாதுகாப்பு குழுமங்கள் என பல்வேறு வகையாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, இப்பிரிவு அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை : இதன்படி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, காஞ்சிபுரம், சேலம் போன்ற இடங்களில், விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, கல்வி நிறுவன கட்டடங்களும் கணக்கெடுக்கப்பட்டு அவற்றுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் மலைப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களாக உள்ள இப்பகுதிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளன. இதனால், யானைகள் தங்கள் பாதைகளை விடுத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்களை தடுக்க வேண்டிய, மலைப்பகுதி பாதுகாப்பு குழுமம் (எச்.ஏ.சி.ஏ.,) உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இந்த புகார்கள் குறித்து விசாரித்து, மலைப்பகுதி பாதுகாப்பு குழுமம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, நகரமைப்பு துறை இயக்குனருக்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் பணீந்திர ரெட்டி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்து நகரமைப்புத் துறை இயக்குனர் கார்த்திக், அரசு செயலருக்கு பதில் அறிக்கை அனுப்பியுள்ளார்.

நோட்டீஸ் : இது குறித்து நகரமைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மண்டல மலைப்பகுதி பாதுகாப்பு குழுமம், இங்குள்ள யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்ததில், 15 நிறுவனங்களின் கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் பல்கலைக்கழகம், அதன் நிர்வாகத்துக்கு சொந்தமான மேலும் மூன்று பள்ளி கட்டடங்கள், யோகா பயிற்சி மையம் மற்றும் அதன் நிர்வாகத்துக்கு சொந்தமான இரண்டு பள்ளி கட்டடங்கள், பெருமாள் கோவில் பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட், வெள்ளிமலை பட்டினம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி வளாகம். பொறியியல் கல்லூரி, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஆலந்துறை கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, மவுதம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வேதச மேலாண்மை கல்வி நிறுவனம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பொழுதுப்போக்கு பூங்கா, ஆன்மிக மையம் ஆகிய, 15 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்களுக்கு, அவர்கள் அளிக்கும் பதில்களை பொறுத்து இக்கட்டடங்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை