சேலம்: ஏற்காட்டில், வருவாய்துறை மற்றும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, 19 லோடு, "சில்வர் ஓக்' மரங்களை விடுவிக்க, அதிகாரிகள் சிலர் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்காட்டில், காஃபி பரவலாக பயிரிடப்படுகிறது. காஃபி செடிக்கு போதுமான நிழல் தேவைப்படுவதால், "சில்வர் ஓக்' மரங்களை, எஸ்டேட் உரிமையாளர்கள், வளர்த்து வருகின்றனர். காஃபி செடியில் ஊடு பயிராக உள்ள, "சிலவர் ஓக்' மரங்கள் வெட்டப்படும் போது, அவற்றை மர அறுவை மில் உரிமையாளர்கள் வாங்கி செல்கின்றனர். "சில்வர் ஓக்' மரங்களை வெட்டுவதற்கு, கலெக்டர் தலைமையிலான குழுவினர், "கட்டிங் ஆர்டர்' வழங்க வேண்டும். அதன் பின், வெட்டப்பட்ட மரக்கட்டைகளை, லாரிகளில் எடுத்துச் செல்ல வருவாய் துறை, வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். "கட்டிங் ஆர்டர்' வாங்காமல் வெட்டப்படும் மரங்களையும், அனுமதி பெறாமல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் மரக்கட்டைகளையும், வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த, இரண்டு மாதத்துக்கு முன், "கட்டிங் ஆர்டர்' இல்லாமலும், இடம் பெயர்ந்து கொண்டு செல்ல அனுமதி பெறாமலும், ஏற்காட்டில் இருந்து, வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட, எட்டு லோடு, "சில்வர் ஓக்' மரங்களை, வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எட்டு லோடு மர கட்டைகளையும், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து, போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, ஏற்காடு அருகே உள்ள பட்டிப்பாடி வேலூர், முளுவி உள்ளிட்ட பகுதிகளில், 11 லோடு, "சில்வர் ஓக்' மரங்கள் விதி முறை மீறி வெட்டி, எடுத்து செல்வதை கண்டறிந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்த, 11 லோடு, "சில்வர் ஓக்' மர கட்டைகளும், லாரியுடன் அந்தந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், 2012 அக்டோபரில், "சில்வர் ஓக்' மரங்களுக்கு, "கட்டிங் ஆர்டர்' வாங்குவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதனால், "சில்வர் ஓக்' மரங்களுக்கு கட்டிங் ஆர்டர் வாங்க தேவையில்லை என்று அதிகாரிகளிடம், மர அறுவை மில் உரிமையாளர்கள் வாதாடி, மர லோடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
"சில்வர் ஓக்' மரங்களுக்கு, "கட்டிங் ஆர்டர்' வாங்குவதில் விலக்கு அளிக்கப்பட்டாலும், இடம் பெயர்ந்து கட்டைகளை கொண்டு செல்ல, எவ்வித அனுமதியும் பெற வில்லை என, கூறி, அதிகாரிகள், மர லோடுகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். மர லோடுகளை விடுவிக்க அதிகாரிகள் சிலர் பேரம் பேசுவதாகவும், மர அறுவை மில் உரிமையாளர்கள், நீதி மன்றம் மூலம் மரக்கட்டை லோடுகளை விடுவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சாலை ஓரமாக, 11 லாரிகள் மரக்கட்டைகளுடன் நிறுத்தி வைத்துள்ளதால், லாரி வாடகை, லாரி பழுது, கூடுதல் செலவினத்துக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறை, ஏற்காடு ரேஞ்சர் ராஜேந்திரனத்திடம் கேட்ட போது, ""விதி முறை மீறியதால், மர லோடுகள் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள், நீதிமன்றத்தை நாடியுள்ளனர்,'' என்றார்.
மர அறுவை மில் உரிமையாளர்கள் சங்க தலைவர் நடேசனிடம் கேட்ட போது, ""நான், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன். ஆனால், சங்க உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்று கொள்ளவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட மரக்கட்டைகளை விடுவிக்க வருவாய் துறை அதிகாரிகள் பேரம் நடத்தியிருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். இதுபற்றி, நான் கருத்து கூற விரும்பவில்லை,'' என்றார்.
சேலம் ஆர்.டி.ஓ., சதீஷ் கூறியதாவது: ஏற்காட்டில், "சில்வர் ஓக்' மரங்கள், "செல்லிங் ஆர்டர்' இல்லாமல் வெட்டப்பட்டது. இந்த மர லோடுகள் பறிமுதல் செய்து, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, "சில்வர் ஓக்' மரம் இடம் பெயர்ச்சி செய்ய அனுமதி வாங்க தேவையில்லை என்றே உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட வனக்குழு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடைபெறும் போது, பட்டாதாரர்கள் விண்ணம் செய்து, "சில்வர் ஓக்' மரம் வெட்டிட, "செல்லிங் ஆர்டர்' வாங்க வேண்டும். இந்த, "ஆர்டர்' எதுவும் வாங்காத மரங்களை மட்டுமே பிடித்து வைத்துள்ளோம். "சில்வர் ஓக்' மரம் எந்த பட்டா நிலத்தில் இருந்து வெட்டப்பட்டது என்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.