சென்னை: பின்னணிப் பாடகி சின்மயி, அளித்த புகாரின் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்கை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, "சைபர் கிரைம்' போலீசாருக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சினிமா பின்னணிப் பாடகியான சின்மயி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், "தனது சமூக வலை தளத்தில், சிலர் ஆபாசமாக பேசுகின்றனர். மிரட்டல் விடுக்கின்றனர்' என, கூறியிருந்தார்.
இதையடுத்து, சென்னை, "நிப்ட்' கல்லூரியின், இணை பேராசிரியர், சரவணகுமார், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், கைது செய்யப்பட்டார். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பெண்களை துன்புறுத்துவதை தடுக்கும் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, நவம்பர், 1ம் தேதி, எழும்பூர் கோர்ட், சரவணகுமாருக்கு ஜாமின் வழங்கியது. தன் மீதான வழக்கை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், சரவணகுமார் தாக்கல் செய்த, மனுவில் கூறியிருப்பதாவது:
சமூக நலனுடன், மனிதாபிமானத்துடன், நேர்மறையான அணுகுமுறையுடன் செயல்படுபவன். சின்மயி அளித்த புகாரின்படி, என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணை துன்புறுத்தல், மிரட்டல் எதுவும் செய்யவில்லை. என் மீதான வழக்கை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி ஆறுமுகசாமி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.