திருச்சி: சீரான மின்விநியோகத்தை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்தத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்தன.
மத்திய அரசின் நவரத்ன நிறுவனங்களில் ஒன்றாக, திருவெறும்பூர் "பெல்' நிறுவனம் மூலம், திருச்சி மாவட்டம் தொழில் நகர அந்தஸ்தை பெற்றுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள், "பெல்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, சார்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மொத்தத்தில் திருச்சியின், தஞ்சை, புதுகை எல்லைகள், தொழில் நிறுவன நகரமாக உள்ளன. குறிப்பாக, திருச்சியில், 1,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில், கடுமையான மின்வெட்டில் இருந்து ஓரளவு மீண்டாலும், திருச்சி மாவட்டத்தில், வீடு, கடை உள்ள பகுதிகளுக்கு, 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு, தினமும், 50 சதவீதத்துக்கு குறைவாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கடும் மின்வெட்டு காரணமாக, தினமும் அரைநாள் கூட வேலை செய்ய முடியாத நிலையில், தொழிலாளர்களும், முழுச் சம்பளம் கொடுத்து, முழுமையாக வேலை வாங்க முடியாத நிலைக்கு தொழில் நிறுவனங்களும் தள்ளப்பட்டன. இதனால், 200க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இழுத்து பூட்டப்பட்டுள்ளன.
கூடுதல் செலவில், ஜெனரேட்டர் கொண்டு இயக்கப்படும் தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. இதனால், தினந்தோறும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 5,000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்து, பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, சிறப்பாக வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து சென்ற பெண் தொழில் முனைவோர்கள், மின்வெட்டு காரணமாக தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு, வங்கியில் வாங்கிய கடனை கூட கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். இங்கு பணி புரிந்த ஏராளமான பெண் தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில், சீரான மின் விநியோகத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட மாவட்டங்களில், ஏற்கனவே "கோமா' நிலையில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் நேற்று ஸ்தம்பித்தன.
கலெக்டரிடம் மனு: தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு (டான்ஸ்டியா) தலைவர் ராஜப்பா ராஜ்குமார், பெல்சியா செயலாளர் மகேஸ்வரன், பிடாஸ் தலைவர் சிவமணி உள்ளிட்டோர், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் நேற்று மனு கொடுத்தனர். இதுகுறித்து டான்ஸ்டியா ராஜப்பா ராஜ்குமார் கூறியதாவது:
சீரான மின்விநியோகத்தை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் நடக்கும் வேலை நிறுத்தத்தத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
தொடர்ந்து, 6 மணி நேரம் மின்சாரம் வழங்கினால், மற்ற நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் தொழிற்சாலைகளை இயக்க முடியும். துவாக்குடி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள, மின்வாரியத்துக்கான உபகரணங்கள், தளவாடங்கள், கருவிகள் தயாரித்து வருகிறோம்.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, முறையாக மின்சாரம் வழங்கினால், மின் உபகரணப் பொருட்களின் தட்டுப்பாட்டையும் நீங்கலாம். உற்பத்திப் பொருட்கள் கிடைத்தால்தான் மின்வெட்டு நீங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.