சேலம்: தமிழக அரசின் புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறையில் உள்ள பதவிகள் மாற்றப்படுகின்றன.
துணை இயக்குனர் பதவிக்கான அந்தஸ்து இணை இயக்குனர் நிலையில் மாற்றியமைக்கவும், மூன்று மண்டலத்தை, ஆறு மண்டலமாக பிரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர, கால்நடைகள், பயிர்சாகுபடி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு பணிகள், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் பற்றிய தகவல் உள்ளிட்டவற்றை, புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை அதிகாரிகள் சேகரித்து, மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில், சென்னை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு புள்ளியியல் துறை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சேலம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. தற்போது, மூன்று மண்டலமாக இருப்பது, ஆறு மண்டலங்களாக மாற்றியமைக்கப்படுகிறது. எந்தெந்த மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தலாம் என, அரசு ஆலோசித்து வருகிறது.
மண்டலத்துக்கு தலைமை அதிகாரியாக துணை இயக்குனர் பதவி தற்போது உள்ளது. அந்த பதவியை, மற்ற துறையில் உள்ளது போல், இணை இயக்குனர் அந்தஸ்துக்கும், மாவட்டத்துக்கு உதவி இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி, துணை இயக்குனராகவும் மாற்றப்பட உள்ளனர்.
அதேபோன்று, வருவாய் கோட்டத்தின் அடிப்படையில் உள்ள பதவியிடம், இனி உதவி இயக்குனராக மாற்றப்படுகிறது.
ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பதவியிடத்தில், எவ்வித மாறுதலுமின்றி தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக, சேலம் மண்டல புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.