விருதுநகர் : ""விருதுநகரில்
நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை ஜன., இறுதியில்
இயங்கும்,'' என, பொறுப்பு கமிஷனர் சேர்மக்கனி தெரிவித்தார்.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில், நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடை, 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதன்
அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், யார் நிர்வாகிப்பது என்ற
குழப்பத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சி பகுதியிலிலும்
கட்டப்படும் எரிவாயு தகன மேடை, அப்பகுதி தனியார் டிரஸ்ட் நிறுவனத்தால்
பாராமரிக்கப்படும்.
இதில் எரிக்கப்படும் சடலங்களுக்கு பெறப்படும்
பணத்தை கொண்டு, எரிவாயு தகன மேடையை பராமரிக்க வேண்டும். ஊழியர்களுக்கும்
சம்பளம் கொடுக்க வேண்டும். இதை நகராட்சி கமிஷனர் தலைமையில் ஒரு குழுவினர்
கண்காணித்து வருவர். இந்நிலையில், விருதுநகரில் கட்டி முடிக்கப்பட்ட
எரிவாயு தகன மேடை,தனியார் "டிரஸ்ட்' அமைப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தில்
,காட்சி பொருளாக உள்ளது.
பொறுப்பு கமிஷனர் சேர்மக்கனி, ""எரிவாயு தகன
மேடைக்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. இதை பராமரிக்க, தனியார்
டிரஸ்ட் நிறுவனத்தை, தற்போது தான் தேர்ந்தெடுத்துள்ளோம். ஜன., இறுதியில்
எரிவாயு தகன மேடை இயங்கும்,'' என்றார்.