லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுடன் புது அணியை உருவாக்கலாமா... அது சாத்தியமாகுமா என்பது குறித்து, சமீபத்தில் ஜோதிடர்களிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
வெற்றி கூட்டணி அமைய, தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய கோவில்களுக்கு, தனது குடும்பத்தினருடன் சென்று, பூபோட்டு குறி கேட்கவும், சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மதசார்பற்ற கட்சிகளுடன், வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., அணியில், புதிய வரவாக தே.மு.தி.க., இடம் பெறும் என, இரு கட்சியின் தொண்டர்களும், எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினரும், இரு கட்சிகளின் கூட்டணி குறித்த, பூர்வாங்க பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.கடந்த, 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டதால், தி.மு.க., வெற்றி பெற்றது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டதால், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., போட்டியிட்டதால், தி.மு.க., தோல்வி அடைந்தது.
எனவே, 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை, தனது அணியில் சேர்த்துக் கொண்டால், வெற்றி உறுதி என்ற கணக்கை தி.மு.க., வகுத்துள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதில், தனிப்பட்ட முறையில், விஜயகாந்துக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது."அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவும், தி.மு.க.,வில் ஸ்டாலினும், முதல்வராவதற்கு, நான் கட்சி நடத்தவில்லை. தி.மு.க.,வுடன் நான் சேர்ந்தால், என் "இமேஜ்' பாதிக்கும். தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்கலாம். ஆனால், நான் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, எனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன், கூட்டணி வைக்க விரும்புகிறேன்' என, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன் தலைமையில், புதிய அணி உருவாகி, வெற்றிக் கூட்டணியாக அமைய வேண்டும்; யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முக்கிய கோவில்களில், பூபோட்டு குறி கேட்கவும், சிறப்பு பிரார்த்தனை நடத்தவும், விஜயகாந்த் திட்மிட்டு உள்ளார்.முதல் கட்டமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், 100 கிராம் தங்கத்தை, முதல் தவணையாக விஜயகாந்த் கொடுத்துள்ளார். இந்த கோவிலுக்கு, தொடர்ந்து, தே.மு.தி.க.,வினரும், தங்கத்தை வழங்க வேண்டும் என, விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க., நிர்வாகி கூறியதாவது:தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என, விஜயகாந்தின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். ஆனால், விஜயகாந்த் மட்டும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, விரும்பாமல் இருக்கிறார். அதேசமயம், தே.மு.தி.க., தலைமையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சில கட்சிகளுடன், கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற திட்டம் விஜயகாந்திற்கு உள்ளது.தே.மு.தி.க.,வின், 12 சதவீதம் ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சியின் 6 சதவீத ஓட்டுகளும், நடுத்தர வாக்காளர்களின் 5 சதவீத ஒட்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற சில கட்சிகளின் 3 சதவீத ஓட்டுகளும் கிடைத்தால், மொத்தம் 26 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்.இந்த கணக்கு தே.மு.தி.க,வுக்கு சாதகமான முடிவை தரும். இதே கூட்டணியை சட்டசபை தேர்தலிலும், அமைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, தனது முதல்வர் கனவை நிறைவேற்றலாம் என, விஜயகாந்த் புது கணக்கு வகுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் கூட கூட்டணியா ? அப்போ கடைய மூட வேண்டியதுதான்..... ஏற்கனவே விலைவாசி, கற்பழிப்பு குற்றங்கள் , காஸ் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, லஞ்சம், உழலுக்கு எதிராக எதுவும் முயற்சி செய்யாதது , செயல்படாத பிரதமர் , அந்நிய முதலீடுக்கு ஆதரவு, ஏகப்பட்ட ஓட்டை, இதுல இவர் எதுக்கு அங்க போகணும்?. இருக்கிற கொஞ்ச மதிப்பும் போய்விடும். இந்த தவறை அவர் செய்ய கூடாது, தனித்துதான் நிக்கணும்.
என்ன புண்ணியமோ, வாசலில் இருக்கும் பிச்சைக்காரனை தாண்டிப்போய், கோயில் உண்டியலில் போடும் பணத்தால்.... எப்போதோ படித்த ஒரு கவிதை இந்நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது... விஜயகாந்த் கோயிலுக்கு கொடுத்த தங்கத்திற்கு பதில்.., வழியே இல்லாத ஒரு ஏழைக்கு உதவியிருக்கலாம்.... வறியவன் ஒருவனுக்கு செய்யும் உதவி, அது ஈசனுக்கே செய்யும் உதவி....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.