சென்னை:சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
நடப்பு நிதி ஆண்டிற்கான, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மாநகராட்சி சார்பில், 1,000 சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தற்போது, முதல் கட்டமாக, 200 சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.
ஒப்பந்த அடிப்படையில்:
இந்த உணவகங்களை நடத்தும் வேலை, ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப் பட உள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, விரைவில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அந்தந்த வார்டுகளிலேயே, உணவகங்கள் அமைக்கப் படுவதோடு, ஒப்பந்தம் எடுப்பவரே பணியாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். உணவகங்கள் அமைக்க தேவையான இடங்களை, மாநகராட்சி தேர்வு செய்யும்.அந்த இடத்திற்கான வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும், ஒப்பந்ததாரரே மேற்கொள்வார். வரும், 25ம் தேதிக்குள், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, இப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஒரு ரூபாய் இட்லி:
சலுகை விலை உணவகங்களில், இட்லி ஒன்று, ஒரு ரூபாய்க்கும்; சாம்பார் சாதம், ஐந்து ரூபாய்க்கும்; தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.இந்த விலை கட்டுப்படியாவதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், மாதம் தோறும், 500 டன் அரிசி, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மாநகர நல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என, அரசு தெரிவித்து உள்ளது.
சாத்தியமா?
குறைந்த விலையில் சுகாதாரமான உணவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் துவங்கப்பட்டாலும், இதை சரிவர செயல்படுத்துவது சாத்தியமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, ஆலந்தூரில், நடைபாதையில் இட்லி கடை நடத்தி வரும், மணிகண்டன் கூறுகையில், ""விற்கும் விலைவாசியில், நான்கு ரூபாய்க்கே இட்லி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. மாநகராட்சி, ஒரு ருபாய்க்கு இட்லி கொடுப்பது, எத்தனை நாளைக்கு தான் தாக்கு பிடிக்குமோ. இதனால், எங்களுக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்,'' என்றார்.
சேப்பாக்கத்தில், சிற்றுண்டி கடை வைத்திருக்கும் முத்து கூறுகையில், ""ஒரு ரூபாய்க்கு இட்லி என்பது, சாத்தியம் இல்லாத விஷயம். விலைவாசி அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில், மலிவு விலையில் உணவு வழங்குவதை, அரசு ஏற்று நடத்துவது வேடிக்கையாக உள்ளது,'' என்றார்.
எழும்பூர் பகுதியில், நடைபாதையில் மதிய சாப்பாடு கடை நடத்தி வரும் சுப்புலட்சுமி கூறுகையில், ""விலை குறைத்து சாப்பாடு போட்டாலும், சுவை இருந்தால் தான் மக்கள் சாப்பிடுவர். இல்யையென்றால், "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்ற பழமொழி போல் தான் மாநகராட்சி உத்தரவு இருக்கும். நான் மீனுடன் சாப்பாடு போடுகிறேன்; மாநகராட்சி போடுமா?'' என்றார்.
விலையை கட்டுப்படுத்தும் வகையில், உணவகங்களுக்கு மலிவு விலை அரிசு வழங்கப்பட்டாலும். மற்ற செலுவுகள் எப்படி சமாளிக்கப்படும் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
நியாயமா?
அதே நேரத்தில், திறந்த நிலை பொருளாதார கொள்கையை நாடு பேணி உள்ள நிலையில், சிறிய அளவில் தொழில் செய்து வரும் சாலையோர உணவகங்களின் பிழைப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திட்டம் நியாயமானது தானா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே போல், மலிவு விலையில் மூலப் பொருட்களை வழங்குவது, போட்டி சட்டத்திற்கு புறம்பானதா என்ற கேள்வியும் எழுகிறது.வார்டு கவுன்சிலர் மற்றும் காவல் நிலையத்திற்கு, மாதம், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை கப்பம் கட்டி சாலையோர உணவகம் நடத்தி வரும் உரிமையாளர்களால், இந்த தேவையற்ற போட்டியை சமாளிக்க முடியுமா?
சிங்கப்பூர் தீர்வு!
சுகாதாரமான உணவு கிடைக்க செய்வதற்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன. அதில் பிரதானம் கண்காணிப்பு. அண்மையில் தான் இறைச்சி கடை மற்றும் உணவக உரிமங்களே சுகாதார துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இப்படி அடிப்படையே சீராக இல்லாத போது, அரசு உணவக தொழிலில் இறங்குவதில் என்ன பயன்?சிங்கப்பூருக்கே செல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு காட்டும் அரசியல்வாதிகளுக்கு, சிங்கப்பூர் தீர்வு தென்படவில்லையா?சிங்கப்பூரில், ஒவ்வொரு பகுதியிலும் இயங்கிவந்த சாலையோர உணவகங்களை ஒருங்கிணைத்து, அந்தந்த பகுதியிலேயே தனி வளாகம் அமைத்து கொடுக்கப்பட்டது. அங்கு அவர்கள் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கின்றனரா என, கண்காணிக்கப் படுகிறது. இதன் மூலம், சிங்கப்பூர் அரசுக்கு, சாலையோர உணவகங்களிடம் இருந்து வரி மற்றும் வாடகை வ‹லிப்பது சுலபமாகிவிட்டது.ஆனால், நம் அரசோ, சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு என்ற, பிரதான வேலைகளை விட்டு உணவகம் நடத்துவதில் முனைப்பாக உள்ளது. இதுவும், பல்வேறு தேவையற்ற திட்டங்களை போல் பயனளிக்காமல் போகும் என, சாலையோர உணவக உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, மதிய உணவு கடை நடத்தும், ராஜு கூறுகையில், ""இது போன்ற பல்வேறு திட்டங்களை, அரசு ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த திட்டமும் அப்படித்தான் இருக்கும். அப்படி செயல்படுத்தினாலும், அந்த உணவு சுவையாக இருக்குமா என்பது சந்தேகம் தான்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாரும் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. இந்த திட்டமும் எப்பயும் போல அம்மா மூலையில உருவானதா இருக்காது இப்ப புதுசா சில அல்லகைகள் செர்திருகுல அவங்களோட யோசனையா இருக்கும். டாஸ்மார்க் வருமானம் மட்டும் பத்தாது பார்களையும் அரசே ஏத்து நடத்துனா நல்ல வருமானம் வருமுல்ல அதற்கான முன்னோட்டம் என்று நினைக்கிறன். அப்படியில்லன வறட்சியில பொதுமக்கள் கஞ்சி தொட்டி தொரக்கிரதுக்கு முன்னாடி அரசே தொறந்துட்டா பிரசினையில்ல பாருங்க.
மக்கள் கடுமையாக பதித்துள்ள பிரச்சனை கடுமையான உயர்துள்ள உணவு பொருள்களின் விலை உயர்வு..,இவ் உயர்வுக்கு காரணம்..,மக்கள் தொகை பெருக்கம்.,உணவு உற்பத்தியின்மை..,அரசியல்வாதிகள் ஊழல்கள்,அரசு அதிகாரிகள் - ஊழியர்கள் இலஞ்சங்கள்..,பொழுதுபோக்கு சினிமா கற்பனை கலை கருப்புப்பணம் முடக்கம், டிவி- களிலில் பார்க்கும் விளம்பரதிருக்கும் பொருள்கள் விலையாக கூடுதல் ஆகின்றது. போன்ற மறைமுக..,மற்றும் நேரடியாக மக்கள் வாழ்க்கை தினசரி பொருளாதாரத்தில்..,பேருந்து கட்டண உயர்வு,மின்கட்டண உயர்வு,பால் கட்டண உயர்வு, ரயில் கட்டண உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு,பெட்ரொலிய பொருள்கள் உயர்வு போன்ற மத்திய, மாநில அரசுகள் கட்டண உயர்வுகள். உழைக்கும் மக்கள் வருமானத்தை சாகடிக்கின்றன. மேலும் மெகா தொடர் தாக்கத்தால் வீட்டில் உணவு சமைக்க மறந்ததால் உணவகத்தில் விலை ஏற்றம்.., மக்கள் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. அரசின் சிற்றுண்டி உணவு விலையில் மக்கள் சாம்பிடும் நிலை.., நடவடிக்கை தமிழக முழுவதும் அனைத்து வார்டுகள் பகுதிகள் தமிழக அரசு செயல் படுத்த படவேண்டும்..., மக்கள் நுகர்வு மூன்று வேலை உணவுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த படவேண்டும். தமிழக அரசுக்கு இனிய பாராட்டுகள் அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் பூபதியார்
தயவு செய்து இந்த திட்டத்தை குறை கூறு பவர்கள் யாரும் அந்த பக்கம் போகவேண்டாம் இந்த திட்டம் ஏழை மக்களுக்கு உதவிகரமான திட்டம் இதை வெற்றி கரமாக நடத்தி விட்டால் தமிழகத்தில் இவர்தான் நிரந்தர முதலமச்சர் இவரை போன்று தமிழகத்தில் எவரும் அருமுகப்படுதியடு கிடையாது அம்மா அவர்கள் பல்லாண்டு வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறு ஆயிரம் பல்லாண்டு வருடம் வரை அம்மா அவர்கள் வாழ வேண்டும்
நல்ல திட்டம். தொடங்கப்பட்டு, ஒரு மாதம் சென்ற பிறகுதான் கருத்து கூற முடியும். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்றாலும் இலவச அரிசியாக இருந்தாலும், சென்னை ஹோட்டல்களில் சாப்பாடு அறுபது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரையிலும், சங்கீத சபா காண்டீன்களில் நூற்று எழுபது ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார்கள். இந்தக் கொள்ளைகளைத் தடுக்க, இது நல்ல வழி என்று தோன்றுகிறது. பார்ப்போம்.
அன்னாடம்காச்சிகளுக்கும், பாதசாரிகளுக்கும், ரோட்டோர வியாபாரிகளுக்கும், பாவப்பட்டவர்களுக்கும் இது நன்மை பயக்கும் திட்டம்....இதிலும் அரசியல்வாதிகளின் தலையீடு (பார்சல்,கமிஷன்,ect ,ect ) இருந்தால்.., ஒப்பந்ததாரர் ஓடிப்போய் விடுவார்... சுவையாகவும்,சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் இருக்கும் பட்சத்தில் இது ஒரு நல்லதிட்டமே....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.