தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரிநீர், மழைநீர் அறவேயின்றி பயிர் விளைச்சல் பாதித்ததால், நஷ்டத்தில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இனிக்கவில்லை.
தமிழகத்தில், டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை, சம்பா சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் துவக்கினர். சில விவசாயிகள் மட்டும் காவிரி நீர் வருமா?, மழை பெய்யுமா? எனும் சந்தேகத்தில் நிலங்களை தரிசாக போட்டு வைத்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பங்களிப்பு காவிரி நீர், 48 டி.எம்.சி., வழங்காமல் கர்நாடகா அரசு முழுமையாக கைவிரித்து, நட்டாற்றில் தவிக்க விட்டது. ஆனால், தமிழக அரசு பகீரத முயற்சியால், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய தரப்பிலிருந்து கடும் கண்டனத்துக்கு, கர்நாடகா அரசு ஆளானது. ஆனாலும் காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை.தமிழக அரசின் நடவடிக்கையால் கடந்தாண்டு அக்டோபர் மாதம், 5ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையில், பாசன தண்ணீர் தேவையை நேரில் ஆய்வு செய்தனர். ஆனாலும் பலனில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி, நாசமாகின.காவிரி நீர் எதிர்பார்ப்பில் இருந்த டெல்டா விவசாயிகளும், விவசாய அமைப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளானதால், பண்டிகைகளை புறக்கணிப்பதாக, அறிவித்தனர்.நெல் சாகுபடியில், விளைச்சலின்றி ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவழித்து, நஷ்டமடைந்துள்ளனர். இதனால், 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் முன்வைத்து காத்திருக்கின்றனர். குடும்பம் நடத்தக்கூட, கையில் பணமில்லாத நிலையில் உள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டவில்லை.
பொங்கல் சம்பிரதாயங்கள் நடப்பாண்டு களைகட்டாதது பற்றி, தஞ்சை விவசாயிகள் கோவிந்தராஜ், ஜீவக்குமார் கூறியதாவது:குறுவை, சம்பா பருவ நெற்பயிர் விதைப்பு பணிக்கு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவாகி விட்டது. ஆனால், பயிர் விளைச்சலோ அடியோடு இல்லை. அதனால், கையிருப்பு பணமின்றி, பொங்கலை ஆடம்பரமின்றி கொண்டாடுகிறோம்.கடந்த, 10, 11ம் தேதிகளில் நிதித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவினர், முதல்வருக்கு உரிய பரிந்துரையை வழங்கி, ஏக்கருக்கு முழு நிவாரணம், 25 ஆயிரம் ரூபாயை பெற்றுத்தர வேண்டும்; அப்போதுதான் டெல்டா விவசாயிகளுக்கு உண்மையான பொங்கல்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
* டெல்டாவில் களையிழந்த பொங்கல், வீடுகளில் முடங்கிய விவசாயிகள்:காவிரி நீர், மழை நீரின்றி நெல்விளைச்சலின்றி வறட்சியின் பிடியில் தவிக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்ட கிராமப்புற விவசாயிகள், ஆடம்பரமின்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடி, வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனால், நகரங்களில் கடைவீதிகள் களையிழந்து காணப்பட்டது. டெல்டா மாவட்ட நகரங்களில் மட்டுமே பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சம்பிரதாயத்துக்காக, பண்டிகையை கொண்டாடினர். இதனால், வழக்கமாக பொங்கல் பண்டிகை காலங்களில் கலகலவென இருக்கும் டெல்டா மாவட்டங்கள், இந்த ஆண்டு எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக காணப்பட்டது.விவசாயிகள் பொங்கல் பண்டிகை வீட்டில் சம்பிரதாயமாக கொண்டாடிவிட்டு, வழக்கமான உற்சாகமின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். வறட்சி காரணமாக, டெல்டா விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை இனிக்கவில்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
///v j antony திமுக வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைபவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்று தண்ணீரில் அரசியல் கலந்ததோ அன்று முதல் விவசாயிகள் வாழ்க்கை நரகமாகி விட்டது /// இருக்கலாம்.. அனால் அவர் ஆட்சியில்.. இப்படி பயிர்கள் கருகியதில்லை.. காவேரி வறண்டதும் இல்லை.. ஈகோ பார்க்காமல்.. அந்த மாநில முதல்வர்களை சந்தித்து தண்ணீர் வாங்கி தந்தார்.. இவர் ஈகோவால், தலை கனத்தால் அலைகிறார்......
நாங்கள் முன்பெல்லாம்.... பொங்கலுக்கு முதல் நாள் இரவு.. அல்லது.. அதிகாலையில் வயலுக்கு சென்று.. நெற்பயிரை வேரோடு பிடுங்கிவந்து... அதையும் பொங்கல் பூஜை பொருளாக வைத்து பொங்கல் கொண்டாடுவோம்.. பின்னர் அந்த நெல்லை எடுத்து.. இடித்து... வரும் அரிசியை..தனியாக பொங்குவோம்.. இப்போது எல்லாம் மாறிவிட்டது.. தண்ணீர் வருவதும் இல்லை... வருகின்ற காலமும் மாறிப்போனதால்.. இந்த முறையும் மாறிவிட்டது..இப்போது.. மொத்தமும்... நெல்லோடு சேர்ந்து மூழ்கிப்போனது.. என்ன செய்ய... " வரப்புயர நெல் உயரும் " நெல் உயர மக்கள் உயர்வான்" மக்கள் உயர மன்னன் உயர்வான் " எனபதில் இப்போது மன்னன் ( அரசி ) மட்டு உயர்ந்து காணபடுகிறார்.. தான் என்ற அகந்தையால் வந்தது...இது......
திருவள்ளுவர் தினத்தையும் புறக்கணிக்க வேண்டும். கர்நாடகாவில் பாதி பஞ்சம், தமிழகத்தில் முக்கால் பஞ்சம், ஆந்திராவில் பெய்தும் அழிந்தது-பாதி பஞ்சம். இனியும் இவர்களுக்கு ஏன் அரசு, ஆட்சி, அரசியல் சட்டம் எல்லாம்?. அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு சிறையிலிருக்கும் பழனிசாமி குழுவினரை வெளிக்கொணர்ந்தது போல், இந்த சிதம்பரத்தின் சி பி ஐ அல்லது ஆந்திரா ராவ் போன்ற ஜட்ஜுகளின் கை கால்களில் விழுந்தாவது, ரெட்டிகளை வெளிக்கொணர முயற்சிக்கலாம். அப்போதாவது மழை ஒழுங்காக பெய்கிறதா என்று பார்க்கலாம்.
டெல்டா மாவட்டங்களில் மக்களை வஞ்சிக்கிறது ஆளும் அதிமுக அரசு. உரிய நிவாரனம் வழங்கி மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம். காரணம் இம்மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை( திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் மற்றும் நாகை பாராளுமன்றம்) திமுக கைப்பற்றியிருப்பதால் மக்களைப் பழி வாங்கும் விதமாக மெத்தனமாக அரசு செயல்படுகிறது. உடன் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை வஞ்சித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்குப் படுதோல்வி நிச்சயம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.