கோவை:கூடலூர் பேரூராட்சியில், பள்ளிக்குரிய இடத்தை மனையிடங்களாக மாற்ற அனுமதித்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவைக்கு அருகிலுள்ள கூடலூர் பேரூராட்சியில், 1978ல் நகர ஊரமைப்புத்துறையின் அங்கீகாரத்துடன் விவேகானந்தா நகர் என்ற லே-அவுட் அமைக்கப்பட்டது. மொத்தம் 77 மனையிடங்கள் பிரித்து விற்கப்பட்டன. ரோடு, சாக்கடை மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதே லே-அவுட்டில், சிறுவர் பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 48 சென்ட் இடம் ஒப்படைக்கப்படவில்லை.
பள்ளி கட்டுவதாகக் கூறி, இந்த இடத்தை வாங்கிய நபர், கடந்த 1991ல் மனையிடங்களாக பிரித்து விற்பதற்கு, பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். இதற்குரிய எவ்வித அதிகாரமும் இல்லாத பேரூராட்சி நிர்வாகத்தின் அன்றைய செயல் அலுவலர் குஞ்சு முகம்மது, 48 சென்ட் இடத்தை 12 மனையிடங்களாகப் பிரித்து முறைகேடாக அனுமதி அளித்தார்.அந்த இடத்தில் சிலர் வீடு கட்ட முயன்றபோதுதான், லே-அவுட்டில் மனையிடங்களை வாங்கிய மக்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அங்கு பள்ளி மட்டுமே கட்ட வேண்டுமென்று பொது மக்கள் போராடினர்; பள்ளிக்கான இடத்தில் பள்ளியே கட்டப்படவேண்டுமென்று நகர ஊரமைப்புத் துறையும் உத்தரவு தந்தது; பேரூராட்சி மன்றத்திலும் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து, அந்த இடத்தை வாங்கியவர்கள் சிலர் ஐகோர்ட்டில் தடையுத்தரவு பெற்றனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், அந்த தடையுத்தரவை ரத்து செய்தது; பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் கூட்டு முயற்சியால், அந்த இடத்தில் பள்ளிக் கூடம் கட்டுவதற்கு எஸ்.எஸ். ஏ., திட்டத்தில், 7.5 லட்ச ரூபாய் நிதி பெறப்பட்டது. கட்டடம் கட்டப்பட்டு, 2010 ஜூனில் இருந்து ஆரம்பப்பள்ளியும் செயல்படத் துவங்கி விட்டது.தற்போது இந்த பள்ளியில் 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; இரு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், மாணவ, மாணவியர்க்கு கழிப்பிட வசதி இல்லை; சமையலறையும் கட்டப்படவில்லை. பள்ளிக் கட்டடம் கட்டப்பட்ட இடம் போக, மீதமுள்ள இடத்தில் இதனைக் கட்டுவதற்கு முயன்றபோது, 12 மனையிடங்களை வாங்கியவர்களில் வேறு 6 பேர், "தங்களுடைய மனையிடத்தில் கட்டடம் கட்ட முயற்சி நடப்பதாக' ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சசிதரன், கடந்த அக்டோபரில் இடைக்கால உத்தரவு வழங்கினார்.
அதில், "நகர ஊரமைப்புத்துறை அங்கீகரித்த மனைப்பிரிவில், திருத்தப்பட்ட வரைபடத்துக்கு அனுமதி வழங்கிய செயல் அலுவலர் மற்றும் உதவிய அலுவலர்கள் யார் எனக் கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 2013 பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு' கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார்.பள்ளிக்குரிய இடத்தை மனை இடங்களாக மாற்றி வாங்கியவர்கள், "சிறுவர் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம், உள்ளாட்சியிடம் ஒப்படைக்க வேண்டிய இடமில்லை' என்று நகர ஊரமைப்புத்துறையின் துணை இயக்குனர், கடந்த ஆண்டு பிப்.,27ல் தந்த உத்தரவின் அடிப்படையில், அந்த இடத்துக்கு உரிமை கோரி, கோர்ட்டில் வாதாடி வருகின்றனர். இன்னும் இறுதித் தீர்ப்பு வராத நிலையில், தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.கலெக்டர் கருணாகரனிடம் கேட்டபோது, ""அந்த லே-அவுட்டில் மனையிடங்களாக மாற்றி அனுமதியளித்த செயல் அலுவலர் இறந்து விட்டார்; அதற்கு உதவியாக இருந்த மற்ற அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய காலத்துக்குள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இவ்விரு தரப்பிலான சட்டரீதியான மோதலும், கழிப்பிடம் இல்லாமல் இந்த பள்ளியின் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் படும் சிரமமும் எப்போது முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை, "வானளாவிய அதிகாரத்துடன்' முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருந்தாலே, அதுவே மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதான்.
அதிகாரமே இல்லை!இந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ள வேறு சில கருத்துக்கள்தான், பொது ஒதுக்கீட்டு இடங்களை ஆக்கிரமிப்போருக்கும், அதற்கு உதவும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் சம்மட்டி அடியாகவுள்ளது. தனது உத்தரவில், "பொது உபயோக இடங்களை வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது' என்று அழுத்தமாகக் கூறியுள்ள நீதிபதி, "நகர ஊரமைப்புத் துறை அங்கீகரித்ததை மாற்றுவதற்கு உள்ளாட்சிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது,' என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாட்டில் நடைபெறும் லஞ்ச ஊழல்களுக்கும், அவலங்களுக்கும் லஞ்சம் வாங்கி சட்டத்தை வளைக்கும் ஆளும்கட்சியும், அதிகாரிகளும் மட்டும் அல்லர்..!! முக்கிய காரணம் இந்த நீதிபதிகளின் தகிடுதத்தமும் தான்..!! சட்டத்தை இப்படி சாக்கடையாக்கி விட்ட பெருமை, தங்களின் இஷ்டத்துக்கு தடை உத்தரவும், இடைத் தீர்ப்பும், தீர்ப்பும், என்று இடியாப்பமாக்கி விட்டு, காலமும் தாழ்த்தி நீதி தேவதையை ஒரு பரத்தை அளவுக்கு மாற்றி விட்டார்கள்..!! நமது சட்டப் புத்தகங்களை புதைத்து விட்டு புதிதாக சட்டங்கள் இயற்றா விட்டால் கடவுளே வந்தாலும் இந்தியாவை காப்பாற்ற முடியாது..!!

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.