புதுடில்லி: டீசல் விலை, நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டுள்ளதால், நிதி பற்றாக்குறையால் ஏற்கனவே தள்ளாடி வரும் இந்திய ரயில்வே துறைக்கு, கூடுதலாக, 2,700 கோடி ரூபாய் செலவை ஏற்படுத்தும். இதனால், ரயில்வே சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், இந்திய ரயில்வே துறைக்கு, 1 லிட்டர் டீசல் விலையில், 30 பைசா குறைத்து வழங்குகின்றன.இதில், 80 சதவீத டீசலை, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்தும், மீதமுள்ள, 20 சதவீதத்தை மற்ற இரண்டு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தும் ரயில்வே பெறுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், "ரயில்வே மற்றும் மாநில போக்குவரத்து கழகங்களும், சந்தை விலையில் தான் டீசலை பெற்று கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் மானிய சுமையை குறைப்பதற்கான இந்த உத்தரவால், ரயில்வே துறை கடுமையாக பாதிப்படையும்.புதிய உத்தரவு படி, தனி நபர்கள், 1 லிட்டர் டீசல் விலையில், கூடுதலாக, 50 பைசாவும், மொத்தமாக கொள்முதல் செய்யும் ரயில்வே மற்றும் போக்குவரத்து கழகங்கள், 1 லிட்டருக்கு, 10 ரூபாயும் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்.நாடு முழுவதும், 4,500 டீசல் ரயில் இன்ஜின்களை இயக்கும் இந்திய ரயில்வே, அதற்காக, ஆண்டுக்கு, 250 கோடி லிட்டர் டீசலை வாங்குகிறது. ஒரு லிட்டர் டீசல் விலையில், 10 ரூபாய் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஓராண்டில், இந்திய ரயில்வே துறைக்கு, கூடுதலாக, 2,700 கோடி ரூபாய் செலவாகும் என, புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.வரியுடன் சேர்த்து, ஒரு லிட்டருக்கு, கூடுதலாக, 10.80 ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், ரயில்வேக்கு, ஆண்டுக்கு, 2,700 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ரயில் பயணிகள் கட்டணங்கள் உயர்த்தப்படாததால், கடந்த சில நாட்களுக்கு முன், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. புதிய கட்டணங்கள், இம்மாதம், 22ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.இந்நிலையில், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் பிரதிபலிப்பு, கட்டண உயர்வாகவே இருக்கும் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், கட்டணங்கள் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் திணறி வரும் ரயில்வே துறை, இந்த ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டை, 60 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 51 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு செப்டம்பரில், டீசல் விலை, ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது; உடனடியாக, சரக்கு கட்டணங்கள், 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டன. இப்போது, 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், சரக்கு கட்டணமும், பயணிகள் கட்டணமும் மேலும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.