கரூர்
: பொங்கல் விழாவை முன்னிட்டு, நான்கு நாட்களில், கரூர் மாவட்ட டாஸ்மாக்
கடைகளில், 6.78 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது
பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்கள் விற்பனை
முக்கிய இடத்தை பிடிக்கிறது. திருவிழாக்கள்,விசேஷங்கள் மற்றும் பிறந்தநாள்
கொண்டாட்டங்களில், மதுவிருந்து தவிர்க்க முடியாத, நாகரிகமாக மாறி
வருகிறது. மேலும் மாவட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து, மதுவிற்பனையை
அதிகரிக்க, டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுக்கிறது.கரூர்
மாவட்டத்தில், 120 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், 80
கடைகளில் மட்டுமே பார்கள் ஏலம் எடுத்து நடத்தப்படுகிறது.பொங்கள் பண்டிகை
முன்னிட்டு, குதிரை மற்றும் மாட்டு பந்தயம்,சேவல் சண்டை போன்ற பல்வேறு
விளையாட்டு போட்டிகள், மாவட்டத்தில் களைகட்டியது. இதைப்போல பிராந்தி,
விஸ்கி, ரம், பீர் ஆகிய மதுவகைகள் விற்பனை, கரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில்
படுஜோராக நடந்தது.
கடந்த, 13ம் தேதி மதுபான வகைகள், 3,370 பெட்டிகளும்,
பீர் வகைகள், 2,013 பெட்டிகள் என, ஒரு கோடியே, 52 லட்சத்து, 61 ஆயிரம்
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 14ம் தேதி மதுவகைகள், 5,335
பெட்டிகள், பீர் வகைகள், 2,694 பெட்டிகள் என, 2 கோடியே, 35 லட்சத்து, 49
ஆயிரத்து, 990 ரூபாய்க்கும், 16ம் தேதி மதுபானங்கள், 3,820 பெட்டிகள்,
பீர்கள் 2,537 பெட்டிகள் என, ஒரு கோடியே, 82 லட்சத்து, 21 ஆயிரத்து, 800
ரூபாய்க்கும், 17ம் தேதி மதுவகைகள், 2,368 பெட்டிகள், பீர் வகைகள், 1,684
பெட்டிகள் என, ஒரு கோடியே, 8 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய்க்கும் மதுபானங்கள்
விற்பனை செய்யப்பட்டது.பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கரூர்
மாவட்டத்தில், நான்கு நாட்கள் மட்டும், 14 ஆயிரத்து, 903 பெட்டி மதுவும்,
பீர் வகைகள், 8,928 பெட்டிகள் என மொத்தம், 6 கோடியே, 78 லட்சத்து, 96
ஆயிரத்து, 796 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த
சில ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மது அருந்தும் கலாச்சாரம் பரவி வருவது,
வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது.