சென்னை: கண்டலேறு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், கடந்தாண்டு மற்றும் இந்தாண்டில் வழங்க வேண்டிய 20.24 டி.எம்.சி., தண்ணீரை, அக்டோபர் வரை தடையின்றி வழங்க வேண்டும் என, ஆந்திர மாநில தலைமைச் செயலரிடம், தமிழக தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை, பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வடகிழக்கு பருவ மழை பொய்த்ததன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இருக்கும் நீரைக் கொண்டு, ஆறு மாதங்கள் வரை சமாளிக்க முடியும் என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சூழலில், சென்னையின் குடிநீர் தேவையை, கிருஷ்ணா நீரைக் கொண்டு மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கு - கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை, 3.9 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்ணீரைப் பெற வேண்டி, முதல்வர் உத்தரவின்படி, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான, 42வது ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், இரு மாநில தலைமைச் செயலர்கள் அளவில் நேற்று இக்கூட்டம் நடந்தது. தமிழக தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஆந்திர தலைமைச் செயலர் மினி மேத்யூ, தமிழக பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு மாநிலங்களுக்கிடையில், 1983ம் ஆண்டில் உருவான ஒப்பந்தப்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜூலை முதல், அக்டோபர் வரை, எட்டு டி.எம்.சி., மற்றும் ஜனவரி முதல், ஏப்ரல் வரை, நான்கு டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். கண்டலேறு அணையில், 17.6 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. கண்டலேறு - பூண்டி இடையிலான கிருஷ்ணா கால்வாயில், காளஹஸ்தி அடுத்த உப்பளமடுகு அருகில், உடைப்பு காரணமாக, 1,000 கன அடி நீருக்கு பதில், 150 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, குழாய்கள் மூலம் தண்ணீர் தரப்படுகிறது. கால்வாய் உடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில், 3.9 டி.எம்.சி., மட்டுமே வந்துள்ளதால், மீதமுள்ள நீரை கொண்டு வர, கால்வாயை சீரமைக்கும் பணிகளில், தமிழகம் உதவியளிக்கும். தமிழகத்திற்கு கடந்தாண்டு வர வேண்டிய, தண்ணீர் மற்றும் இந்தாண்டுக்கான தண்ணீரை, தடையின்றி தொடர்ந்து அளிக்க வேண்டும். ஆந்திர எல்லைப் பகுதிகளில், அனுமதியின்றி நீர் எடுக்கப்படுவதை கட்டுப்படுத்தி, குறைந்த பட்சம், 350 கன அடி வரை நீர் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அதற்கு, ஆந்திர மாநில தலைமைச் செயலர், ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீர் குறித்த, செயலாக்க விதிமுறைகள், அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்றும், தெலுங்கு - கங்கை திட்டத்திற்கான தணிக்கை கணக்குகள் விரைவில் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உப்பளமடுகு பகுதியில் மேற்கொள்ளப்படும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பது என்றும், நீர் வழங்கல் மற்றும் அதை சார்ந்த பணிகள் குறித்த, நிரந்தர தொழில்நுட்பக் குழு ஏற்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின், இரு மாநில தலைமைச் செயலர்கள் சந்திப்பதும், இருவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலைமை செயலர் வற்புறுத்துகிறார் என்பது மாநில நலனைக் காக்க அவர் ஆற்ற வேண்டிய கடமை இன்று ஒவ்வொரு மாநிலமும் ஒரு சமஷ்டி அமைப்பு என்ற நினைவே இல்லாது ஒரு தனி நாடு போல் தன்னிச்சையாக செயல் பட்டுக் கொண்டிரும்போது எங்கிருந்து தண்ணீர் வரப் போகிறது? என்ன, தேசிய ஒருமைப்பாடு தினம் என்று வருடத்தில் ஒரு நாள் விழா எடுத்துவிட்டு, கொடி ஏற்றி தலைமை செயலகத்தில் இருக்கும் அரசு ஊழியர்களை உறுதி மொழி படிக்கச் வைத்து விட்டு செய்திதாள்களில் பத்து முழுப் பக்க விளம்பரங்கள் அந்தந்த முதல்வர் புகைப் படத்துடன் வெளிவருவதைப் பார்த்து தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான் ஆந்திராவில் காங்கிரஸ் அரசு. இந்தத் தண்ணீர் விவகாரத்திலும் புகுந்து விளையாடி தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்வார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.