திருவாரூர்: திருவாரூரில் இருந்து கடைசியாக இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் டீசல் ரயில் இன்ஜின்கள் ராட்சத கிரேன் மூலம் பி.எப்.ஆரில் ஏற்றி திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள், அறிவியல் வளர்ச்சியில் பல்வேறு வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவில் இயக்கப்பட்ட பழங்கால ரயில்கள் முக்கிய நகரங்களில் நினைவு சின்னங்களாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அப்பகுதியில் இயக்கப்பட்ட பழங்கால ரயில்கள் வருங்கால சந்ததினர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நினைவு சின்னங்களாகவும், கலை பொக்கிஷமாகவும் பாதுகாக்கப்படுகிறது. சென்னையில் தென்னக ரயில்வே தலைமையகத்தில் அப்பகுதியில் இயக்கப்பட்ட பழங்கால நீராவி இன்ஜின்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ்ஜில் ஓடிய பழங்கால மின்சார இன்ஜின்கள் நினைவு சின்னங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
திருவாரூரில் வரலாற்றுப்புகழ் பெற்ற நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக பசுவிற்காக தன் மகனை தேர்காலில் இட்டு நீதி வழங்கிய மனு நீதிச்சோழன் சிலை கல் தேர் வடிவில் அனைத்து கலை அம்சங்கள் நிறைந்த வகையில் நினைவு சின்னமாக உள்ளது. இதே போன்று கமலாலய குளம், மாவட்டங்களில் கிடைக்கும் அரிய சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் தியாகராஜர் கோவில் வளாத்தில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ரயில்களில் மிகவும் பழமையானதும், கடைசியாகவும் இயக்கப்பட்டு வந்த திருவாரூர்-காரைக்குடி மீட்டர் கேஜ் டீசல் ரயில் கடந்த அக்டோபர் 19ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அப்பகுதியினர் ரயிலுக்கு மாலை அணிவித்து பிரியா விடை கொடுத்தனர்.
திருவாரூரில் பழமை வாய்ந்த பொருட்களை நினைவு சின்னங்கள் அதிகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறுத்தப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் இன்ஜின் மற்றும் ஒரு பெட்டியை திருவாரூர் ரயில் நிலையத்தில் நினைவு சின்னமாக அமைத்தால், தியாகராஜர் கோவிலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற்கால சந்ததியினருக்கு சிறப்பான கலை பொக்கிஷமாக அமையும்.
எனவே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பெட்டிகளை கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் உடைத்து பகுதி பகுதிகளாக எடுத்துச் சென்றனர். 140 டன் எடை கொண்ட மூன்று டீசல் இன்ஜின்களை ராட்சத இயந்திரம் மூலம் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே நிலைத்திற்கு சொந்த மான ஒர்க்ஷாப்பிற்கு (பிஎப்ஆர்) கோகி பிளாட் ரயிலில் நேற்று ஏற்றிச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.