மானிய விலையில், வீடுகளுக்கு வழங்கும் சமையல் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, மத்திய அரசு குறைத்ததற்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவ்வப்போது விலை உயர்வும், மக்களை பாதித்து வருகிறது. இந்
நிலையில், ""ஆகாயத்தாமரையில் இருந்து, எரிவாயு தயாரிக்க முடியும்; ஒரு சிலிண்டரை, 200 ரூபாய்க்கே தர முடியும்,'' என, சவால் விடுகிறார் சித்த மருத்துவர் வீரபாபு.
சித்த மருத்துவ நூல்களில்...: தமிழகம் முழுவதும், "டெங்கு' காய்ச்சல் வேகமாக பரவி, உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. இதற்கு தீர்வே கிடையாதா என, மக்கள் அல்லாடிய நிலையில், "நிலவேம்பு கசாயம்' அதற்கு தீர்வாகும் என, சித்த மருத்துவர்கள் அரசுக்கு முன் வைத்தனர். அரசும் அதை ஏற்று, அரசு மருத்துவ மனைகளிலும், நிலவேம்பு கசாயத்தை கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தது. அதில், முன்னணியில் இருந்தவர், சித்த மருத்துவர் வீரபாபு. இவர் தான், ஆகாதாயத்தாமரை மூலம் எரிவாயு தயாரிக்க முடியும் என்கிறார்.
எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு வீரபாபு கூறியதாவது: கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம், ஆகாயத்தாமரை செடிகள் தான். நீர்நிலைகளில் பரவி, அதில் கொசுக்கள் முட்டையிட்டு, வேகமாக உற்பத்தியாகிறது. இதனால் அழிக்க வேண்டிய செடியாக ஆகாயத்தாமரை உள்ளது. மாநகராட்சி, அவற்றை அகற்றி குப்பையில் கொட்டி வருகிறது. ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்க முடியும் என, நம் பண்டைய சித்த மருத்துவ நூல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகாயத்தாமரையில், மீத்தேன் அதிகம் உள்ளது. இவற்றை, "பயோ கேஸ் டெக்னாலஜி' முறையில், எரிவாயு
தயாரிக்கலாம்; செலவும் குறைவு தான். இவ்வாறு, அவர் கூறினார்.
எப்படி தயாரிப்பு? : கண்டபடி வெட்டி கொட்டும் ஆகாயத்தாமரை செடிகளை, பெரிய தரைகீழ் தொட்டியில் கொட்ட
வேண்டும்.
அவற்றுடன், வினை ஊக்கிகளை சேர்த்து, நொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு நொதித்ததும், அதில் இருந்து, இயற்கை வாயு (மீத்தேன்) வெளியாகும்.
அவற்றை, ஒரு கலனிற்குள் கொண்டு சென்று, தூய்மைப்படுத்தியதும், சமையலுக்கு தேவையான இயற்கை எரிவாயு கிடைத்துவிடும்.
இவற்றை, சிலிண்டர்களில் பிடித்து, விற்பனைக்கு அனுப்பலாம்.
ரூ.200க்கு சிலிண்டர் : ஆகாயத்தாமரை வெட்ட வெட்ட வளரக்கூடியது. தமிழகத்தில், அதிக அளவில் கிடைக்கிறது.
இதன் மூலம் கிடைக்கும் எரிவாயு செலவு மிகவும் குறைவுதான். எனவே, 200 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் தர முடியும் என, கூறப்படுகிறது. ""தமிழகத்தில் ஒரு சிலிண்டர், 200, 250 ரூபாய் விலையிலும், வெளி மாநிலங்களுக்கு கூடுதல் விலை வைத்தும் விற்கலாம். குறைந்த விலையில் சமையல் எரிவாயு கிடைப்பதால், மற்ற
மாநிலங்களும் நம் உதவியை நாடி வரும். நதிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் தீர வாய்ப்பு உள்ளது,'' என்றும், வீரபாபு கூறினார்.இயற்கை எரிவாயு தயாரிப்பு திட்டத்தை, சோதனை ரீதியில் செயல்படுத்தி பார்க்கலாமா என்பது குறித்து, மேயர் சைதை துரைசாமி மற்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.