கோவை: ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க, தண்டவாளத்தை ஒட்டிய வனப்பகுதியில், யானைகளுக்கு "ரேடியோ காலர்' பொருத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கோவையில், ஏற்கனவே, ரேடியோ காலர் திட்டம் தோல்வியடைந்துள்ளதால், இது, எந்தளவுக்கு பயனளிக்கும் என்பது சந்தேகமாக உள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகம், அசாம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அடர்ந்த வனப்பகுதிக்குள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. நீண்ட தூர ரயில்கள், அதிவேகத்தில் செல்வதால், வன விலங்குகள் ரயிலில்
அடிபட்டு இறக்கின்றன. குறிப்பாக, கடந்த, 10 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. கடந்த, 6ம் தேதி, ஒடிசாவில், ரயிலில் அடிப்பட்டு ஐந்து யானைகள் பலியாயின. இதேபோல், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் யானைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.
ரயில்வேக்கு பரிந்துரை : யானைகள் உயிரிழப்பை தடுக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், ரயில்வே துறைக்கு, பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. முக்கியமாக, "வனப்பகுதிகளில் ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்; யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளில், அடையாள குறியீடு பலகைகள் வைத்து, ரயில் ஊழியர்களை எச்சரிக்க வேண்டும்; ரயில் பயணிகள், உணவுப்பொருட்களை, வனப்பகுதிக்குள் வீசி எறியாமல் கண்காணிக்க வேண்டும்' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது. "வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், தண்டவாளங்களின் இரு பகுதிகளிலும், யானைகளை கவரக்கூடிய உணவுப் பயிர்களை பயிரிடக்கூடாது' என, விவசாயிகளுக்கு அறிவுறுத்துமாறு, மாநில வனத்துறையினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ரயில்வே தண்டவாளங்கள் இருக்கும் வனப்பகுதியில், யானைகளுக்கு, "ரேடியோ காலர்' கருவி பொருத்தவும், மத்திய வன அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, ஒடிசாவில் ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
25 யானைகள் இறப்பு : ஒடிசாவைப் போல், தமிழக-கேரள எல்லையில், கோவை மாவட்டம் மதுக்கரை மற்றும் வாளையார் வனப்பகுதியில், யானைகள் அதிக அளவில் பலியாகின்றன. வாளையார் வனப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், கஞ்சிக்கோடு - வாளையார் - மதுக்கரை இடையே, 25 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. கடந்த 2008 பிப்., 4ம் தேதி, மதுக்கரை அருகே நான்கு யானைகள் மற்றும் வயிற்றில் இருந்த சிசு யானை ரயிலில் அடிபட்டு இறந்தன. மதுக்கரை முதல் வாளையார் வரை, 20 கி.மீ., தூரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
பெண் யானைக்கு ரேடியோ காலர் : கோவையில், கடந்த காலங்களில், யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ்., அடிப்படையிலான, ரேடியோ காலர் திட்டம் போதுமான அளவில் வெற்றியை தரவில்லை. 2011 ஜூலையில், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி வனப்பகுதியில், ஒரு பெண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
இன்னொரு ஆண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின்போது, பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தது. இதனால், ரேடியோ காலர் பொருத்தும் திட்டம், அப்போதே கைவிடப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் யானையும், இப்போது எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை. சில மாதங்கள் மட்டுமே, யானையின் நடமாட்டம் குறித்த "சிக்னல்'கள் கிடைத்தன. அதற்குப்பின், யானையையும், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ரேடியோ காலர் கருவியையும் கண்டுபிடிக்கும் முயற்சி பலன் தரவில்லை. இதனால், மத்திய வன அமைச்சகத்தின் திட்டம், கோவையில் பெரிய அளவில் பலன் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வாளையாரில் கண்காணிப்பு தீவிரம் : கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு கூறியதாவது: கடந்த, 2008ம் ஆண்டு நான்கு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த பின், வாளையார் வனப்பகுதியில் யானைகள் பாதுகாப்புக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உயிரிழப்பை தடுக்க, வனத்துறை - ரயில்வே துறைகளின் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. போத்தனூர் முதல் கஞ்சிக்கோடு வரை, ரயில்களின் வேகத்தை குறைக்கவும் அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. யானைகள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "ஒய்டு டிரஸ்ட்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து, ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசார திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.