""சிறார் குற்ற வழக்குகளை விசாரிக்கும், 32 சிறார் குழுமங்களுக்கும் "முழு பொறுப்பு' உடன் கூடிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும்,'' என்ற கோரிக்கை, நீதித் துறை அதிகாரிகளிடம் வலுத்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு, பிடிபடும் சிறார்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது. அதற்கென வெளியே தனியாக அமைக்கப்பட்ட, கோர்ட் வளாகம் என்ற அமைப்பே இல்லாத இடத்தில் "சிறார் குழுமம்' (கோர்ட்) என்ற மையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என, சட்டம் உள்ளது.
பாலியல் பலாத்காரம் : தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் மட்டும், ஒரே இடத்தில் சிறார் குழுமமும், தங்கும் இடமும் அமைந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் தனித்தனியே, வெவ்வேறு இடங்களில் இரண்டும் அமைந்துள்ளன.
சமீபத்தில் டில்லியில், கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறார் குற்றவாளி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது, போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டை சிறார் குழுமங்களில் விசாரிக்கலாமா அல்லது சிறார் குற்றங்களை விசாரிக்கும் தனிக் கோர்ட்டில் விசாரிக்கலாமா? என்ற பொதுவான பிரச்னை உருவாகியுள்ளது.
சிறப்பு குழுமம் : இச்சூழலில், சிறார் குற்றவாளி என்பதற்கான வயது வரம்பை, 16 எனக் குறைக்க வேண்டும் என்ற குரல், நாடெங்கும் ஒலித்து வருகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக கோர்ட்களில் இருக்கும் இளம் பெண்கள் கற்பழிப்பு, கொலை வழக்குகளை துரிதமாக நடத்தி, தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, 32 சிறப்பு குழுமங்களை அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளே, புதிதாக அமைக்கப்படும் சிறப்பு குழுமங்களின் பணிகளையும் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சிறார் குழுமத்துக்கு என தனியாக நீதிபதி நியமனம் செய்யப்படவில்லை.
ஏற்கனவே மாதம், 20 தனி வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு, இது கூடுதல் பொறுப்பு. இதனால், இவர்களின் வேலைப்பளு அதிகரிக்கும்; வழக்குகள் தேங்கிவிடும் என்று அச்சப்படுகின்றனர்.
கூடுதல் கோர்ட் பணிக்கென தனியாக ஊதியம் இல்லை. பயணப்படி மட்டும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பணியாற்றும் கோர்ட்டுக்கும், சிறார் குழுமத்துக்கும் இடையே 7 கி.மீ., தூரம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நகரங்கள் இதற்குள்ளாக முடிந்து விடுவதால், இதுவும் கிடைக்க இவர்களுக்கு வாய்ப்பில்லை. சமீபத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதி தனது உத்தரவில், அமைக்கப்படும் சிறப்பு குழுமங்களின் நீதிபதிகள் "சேர்மன்' என குறிப்பிடப்படுவர் என தெரிவித்துள்ளார்.
"சேர்மன்' : சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை (03.05.2012) வெளியிட்ட உத்தரவில், "சேர்மன்' என்ற வார்த்தை வரவில்லை. எனவே, இத்துறையில், "சேர்மன்' என்ற பெயர் மாற்றப்பட்டு, "பிரின்சிபல் மாஜிஸ்திரேட்' என திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தனி பொறுப்பு : தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில், சிறார் குழுமங்களை (கோர்ட்களை) திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இக்குழுமம் அமைவிடங்களில் அடிப்படை வசதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
டைப்பிஸ்ட், உதவியாளர், ஸ்டெனோ நியமிக்கப்படவில்லை. எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல், வழக்குகளை எப்படி விசாரிக்க முடியும்? என, நீதிபதிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். பணிக்கான, ஊதியம் பற்றிய அறிவிப்பு இல்லை. முக்கியமாக கூடுதல், அரசு வக்கீல் நியமனம் இதுவரை இல்லை. எனவே, இன்னும், ஒரு சில நாட்களில் பயிற்சியை முடித்துக் கொண்டு, தமிழக கோர்ட்களில் பொறுப்பேற்கும், நீதிபதிகளை இச்சிறப்பு குழுமங்களின், நீதிபதிகளாக( தனிப்பொறுப்பு) நியமிக்க வேண்டும்.தனிப்பொறுப்பில் நியமிக்கப்படும்போது, அவர்கள் தங்கள் ஆர்வத்தை, வழக்குகளில் முழுமையாக செலுத்துவர். கூடுதல் பொறுப்பு என்பதை, ரத்து செய்ய வேண்டும்.
கோர்ட் : குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை, சம்பந்தப்பட்ட போலீசார் பிடித்த போதும், அவர்களை
குற்றப்பிரிவு (சி.ஆர்.பி.,) அதிகாரிகளின், பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மூலமே, கோர்ட்களில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். இவை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை, தமிழ்நாடு நீதித்துறையில் பணியாற்றும், நீதித்துறை அலுவலர்கள் வெளிப்படுத்திஉள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.