சேலம்: சேலம் மத்திய சிறையில், சிறை கைதிகள், ஆயுள் கைதி ஒருவரை தாக்கினர். அதை தடுத்த, போலீஸ்காரரும் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில், தனி செல்லில் அடைக்கப்பட்ட விசாரணை கைதியை விடுவிக்க கோரி, கைதிகள் இருவர், அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
மதுரையை சேர்ந்த, ஆயுள் கைதி செண்பகமூர்த்தி, 50, கொலை வழக்கில் தண்டனை பெற்று, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டவர். இவர், 22 ஆண்டாக, சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர், திருகோணேஸ்வர ராஜா, 28. சமீபத்தில், திருட்டு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். பல்வேறு திருட்டு வழக்கில், அடிக்கடி சிறைக்கு வந்து, திரும்பிய அனுபவத்தில், திருகோணேஸ்வர ராஜா, சிறைக்குள், தனி செல்வாக்கை வளர்த்து கொண்டுள்ளார். மொபைல் போன் பயன்படுத்தி வந்ததை, உயரதிகாரிகளுக்கு செண்பகமூர்த்தி சொல்லிக் கொடுத்து விட்டதாக கருதி, நேற்று காலை, திருகோணேஸ்வரராஜா அவரிடம் பிரச்னை செய்தார். தகராறு முற்றியதில், திருகோணேஸ்வரராஜா, விசாரணை கைதி சதீஷ் ஆகியோர் சேர்ந்து, செண்பகமூர்த்தியை தாக்கினர்.
பணியில் இருந்த சிறை போலீஸ்காரர் பிரபாகரன், தடுத்த போது, அவரையும், இருவரும் தாக்கி காயப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த, சிறை கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள், செண்பகமூர்த்தி மற்றும் போலீஸ்காரர் பிரபாகரனை, சிறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருகோணேஸ்வர ராஜா, உடனடியாக தனி செல்லில் அடைக்கப்பட்டார். இதற்கு, சதீஷ் உள்ளிட்ட கைதிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணை கைதிகளான, சீனிவாசன், லிங்கேஸ்வரன் ஆகிய இருவரும், திடீரென ஆடைகளை களைந்து, ஜட்டியுடன், சிறை கட்டடத்தின் மீது ஏறி, அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தினர். "திருகோணேஸ்வரராஜாவை, தனி செல்லில் இருந்து விடுவித்தால் மட்டுமே, போராட்டத்தை கை விட்டு, கீழே இறங்கி வருவோம்' என, இரண்டு மணி நேரமாக அடம் பிடித்து, ரகளை செய்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சிறை அதிகாரிகள், கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்ததை அடுத்து, கைதிகளின் அரை நிர்வாண போராட்டம் முடிவுக்கு வந்தது.