சென்னை: கணவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டை, மனைவி அணுகினார். அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக மருத்துவக் குழு கூடி, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர், அன்பரசி. இவரது கணவர், சிவப்பிரகாசம். இவரது கல்லீரல் செயல் இழக்கும் நிலையில் இருந்தது. எனவே, அவரசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இம்மாதம், 16ம் தேதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூருவில் இருந்து, கல்லீரல் கொண்டு வரப்பட்டது. இறந்த ஒருவரின் கல்லீரல், சிவப்பிரகாசத்துக்கு பொருத்தப்பட்டது. அந்த கல்லீரல் செயல்படவில்லை. எனவே, மீண்டும் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்பரசி மற்றும் அவரது உறவினர்களிடம், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் தானம் செய்ய, சிவப்பிரகாசத்தின் நெருங்கிய உறவினரான சாய்வினோத் முன்வந்தார். ஆனால், அரசு நியமித்துள்ள மருத்துவக் குழுவிடம் அனுமதி பெற, கால தாமதம் ஏற்படும் என கருதப்பட்டது. அதேநேரத்தில், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
எனவே, ஐகோர்ட்டில் நேரில் சென்று முறையிட, அன்பரசி முடிவு செய்தார். நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன், நேற்று முன்தினம், அன்பரசி ஆஜராகி முறையிட்டார். "உடனடியாக, கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கணவர் உயிருடன் இருக்க மாட்டார்' என, கண்ணீர் மல்க கூறினார். சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கோரினார். இதையடுத்து, அன்பரசியின் முறையீட்டை, உடனடியாக மருத்துவக் குழு பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார். சிறப்பு அரசு பிளீடர் எம்.சி.சாமி, "மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக பரிசீலித்து, உத்தரவிட வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டனர்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.