corruption: Uratha sintthanai | ஊழலின் உக்கிர தாண்டவம் : உரத்த சிந்தனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழலின் உக்கிர தாண்டவம் : உரத்த சிந்தனை

Updated : ஜன 20, 2013 | Added : ஜன 20, 2013 | கருத்துகள் (11)
Advertisement
ஊழலின் உக்கிர தாண்டவம் : உரத்த சிந்தனை

அதர்மங்களின் அளவு கடந்த ஆக்கிரமிப்பால், அகில உலகும் அழியும் நிலையில், விரக்தியடைந்து வெகுண்டெழுந்த சிவபெருமான், உலகின் உச்சியில் நின்று, மண்டை ஓடுகளை மாலையாக்கி மார்பில் அணிந்து, கையில் உடுக்கை எடுத்து அடித்து, அடக்க முடியாத ஆக்ரோஷத்துடன் ஆடிய ஆட்டம், ஊழிக்கூத்து. இன்று இந்திய மண்ணில், ஊழலின் உக்கிர தாண்டவம் உச்ச கட்டத்தைத் தொட்டு விட்டது.

ஒவ்வொரு இந்தியனும் சிவபெருமானாகி, உடுக்கையைக் கையிலெடுத்து அடித்து ஊழிக்கூத்தாடி, ஊழலை வதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல்; ஆதி முதல், அந்தம் வரை, அனைத்திலும் ஊழல். ஊழலின் உச்சக்கட்டத்தில், சகல சட்ட விதிமுறை மீறல்களும் சர்வ சாதாரணமாகி விட்டன.

"ஆம் ஆத்மி- சாமானியன், பாமரன் :

நாட்டின் ஜனத்தொகையில், 2 சதவீதத்துக்கும் குறைவான அரசியல்வாதிகள், காசு பணம் முதற்கொண்டு, கண்ணில் பட்ட அசையும் பொருள், அசையாப் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்துக் குபேரர்களாகிக் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களுக்கு ஓட்டளித்துப் பதவிகளில் உட்கார வைத்திருக்கும், "ஆம் ஆத்மி- சாமானியன், பாமரன், சாதாரண மனிதன்' என்றெல்லாம் அழைக்கப்படும் நாட்டின் பெரும்பான்மை குடிமக்கள், அவர்களை தட்டிக் கேட்க நாதியற்ற இளிச்சவாயர்களாகி, வேடிக்கை பார்த்து வேதனைப் படுகின்றனர். நீதி, நியாயம், நேர்மை, சத்தியம் என்ற பாரம்பரிய பண்பாடுகளெல்லாம், ஓங்கி உயர்ந்து விட்ட ஊழலுக்கு முன்னால், உருப்படியில்லாமல் உருக்குலைந்து விட்டன. நாட்டின் மேம்பாட்டிற்காகவும், நாட்டுமக்களின் நலனுக்காகவும் செலவிடப்படும் அரசு வருவாயில், முக்கால் பங்குக்கு மேல், ஊழலுக்கு இரையாகி விடுகிறது என்பது, அதிர்ச்சி தரும் வேதனையான உண்மை. ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்கள் ஓரங்கட்டப் படுகின்றனர்; விரட்டப்படுகின்றனர்; சில சமயங்களில் விண்ணுலகுக்கே அனுப்பப்பட்டு விடுகின்றனர்.
நாட்டின் இரு கண்கள் :

பஞ்சாயத்து போர்டு உறுப்பினரிலிருந்து, பார்லிமென்ட் தலைமைப் பொறுப்பிலுள்ள பிரதமர் வரை, அனைவரும் நம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். இவர்கள் நடத்துவது தான் ஆட்சி. குக்கிராமங்களின் கடை நிலை ஊழியரிலிருந்து, மத்திய, மாநில அரசுகளின் உச்சக்கட்ட அதிகாரிகள் வரையிலான அனைவரும், அரசு அலுவலர்கள். அவர்கள் நடத்துவது தான் அரசு நிர்வாகம். இந்த இரு பிரிவினரும், நாட்டின் இரு கண்கள். அரசு நிர்வாகத்தின் இதயமும், நுரையீரலும். இந்த இரு கண்களிலும் ஒளி வீசினால், நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுபிட்சம் தழைக்கும். இந்த இதயமும், நுரையீரலும் ஆரோக்கியமாக இயங்கினால், நாடு வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும்.


ஆனால் யதார்த்த நிலை என்ன? :

இந்த இரண்டு கண்களிலும் தன்னலம் என்னும் புரையோடி, மக்கள் நலன் முழுதும் மறைக்கப்பட்டு விட்டது. இதயத்திலும், நுரையீரலிலும் ஊழல் புற்றுநோய் ஊடுருவி உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் நிலை நம்பிக்கையிழந்து நாசத்தின் எல்லையை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், 128 வருட தேச பக்த வரலாற்றுக்குரிய காங்கிரஸ் கட்சி, தன் தலைமைக்கு, இந்திய மண்ணில் பிறந்து வாழும், 128 கோடி மக்களில் தகுதியான ஒருவர் கூடக் கிடைக்காமல், இத்தாலி நாட்டிலிருந்து இங்கு வாழ வந்த ஒருவரைத் தஞ்சம் அடைய வேண்டியுள்ளது. அத்தலைமைக்கு அக்கட்சியிலுள்ள அத்தனை பேரும் அடி பணிந்து சேவகம் செய்கின்றனர். அத்தலைமை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாடறியும்.
கொள்ளை லாபம் அடிக்க உதவி :

ஒரு காலத்தில் நாட்டையே உலுக்கிய ஒரு மாபெரும் ஆயுத பேர ஊழல் வழக்கு, அதன் நியாயமான முடிவிற்கு முறைப்படி எடுத்துச் செல்லப்படாமல், ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் எதுவுமின்றி, பாதியிலேயே முடிக்கப்பட்டது. அடுத்து, நம் நாட்டு ஆளுங்கட்சித் தலைவரின் மருமகன். வெறும், 50 லட்சம் ரூபாய் மட்டும் முதல் போட்டு, ஒரு வியாபாரம் துவங்குகிறார். மூன்றாண்டுகளில் அவர், 300 கோடிக்கு அதிபதியாகிறார். அவருடைய அதிசயக்கத்தக்க வியாபாரத் திறமையில் விளைந்த லாப சாதனைக்கு, அரியானா மாநிலத்திலுள்ள ஏழை எளிய விவசாயிகளின், ஏராளமான விளை நிலங்கள் தாராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டுத் தாரை வார்க்கப்படுகின்றன.எவ்வகை தர்மம் ? :

"2ஜி' ஊழலை இரண்டாமிடத்துக்குத் தள்ளும் வகையில், சத்தமின்றி முடிக்கப்பட்டது நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல். நாட்டின் கஜானாவிற்கு, 1.86 லட்சம் கோடியை நஷ்டப்படுத்தி, நாட்டின் கூட்டுக் குழுமங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவி செய்த நிலக்கரி அமைச்சர், இன்னும் பதவியில் நீடிக்கிறார்.காங்கிரஸ் மட்டுமல்ல, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் பிரமுகர்களும், ஊழல் புகார்களில் தப்பவில்லை. அரசு அலுவலகங்களிலும், தலைமைச் செயலகங்களிலும் உள்ள பெருவாரியான கோப்புகளில் சிறியதும், பெரியதுமான ஊழல்கள், கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. அவைகள் அத்தனையும் இந்நாட்டின் அழிவின் அறிகுறிகள்; அபாயத்தின் அஸ்திரங்கள். பஞ்சாயத்துப் போர்டு முதல், பார்லிமென்ட் வரை, பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் பெரும்பான்மையினர் காட்டும் சொத்துக் கணக்கும், தேர்தல் செலவுக் கணக்கும், பகிரங்கமான பொய் கணக்கு. ஒரு அரசு ஊழியர், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், அவர் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்படுவார். அந்தக் குற்றச்சாட்டுப் பற்றிய விசாரணை முடியும் வரை, அவர் பதவியில் தொடர முடியாது. ஆனால், அனேக அரசியல்வாதிகள், நாட்டையே நாசமாக்கும் ஊழல்களைச் செய்து, சிக்கிச் சிறை சென்று ஜாமினில் வெளி வந்து, கூவியழைத்த போதெல்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்று, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே, பதவிகளில் அமர்ந்து ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருப்பது எவ்வகை தர்மம் என்பது புரியவில்லை.

எல்லா கட்சிகளிலும் ஏராளமான தேச பக்தர்களும், திறமையானவர்களும், நல்லவர்களும், நேர்மையானவர்களும் உள்ளனர். ஆனால், தகுதிக்கு மரியாதை இல்லை. விளைவு... வாரிசு அரசியல் வேரூன்றத் துவங்கி வெகுகாலமாகி விட்டது. ஆனால், அது இப்போது விஷ விருட்சமாக வளர்ந்து விழுது விட்டு நிற்கிறது. நேரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினர், பிரதமர்களாக இருந்து முடிந்த பின், நான்காவது தலைமுறை, அடுத்த பிரதமர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமைச்சர் ஜனாதிபதியானார்; அவர் காலி செய்த பார்லிமென்ட் தொகுதி, அவருடைய மகனுக்குப் போகிறது. நாட்டின் பிரதமராகிறார் ஒருவர். சில ஆண்டு கழித்து அவர் மகன் அவருடைய மாநிலத்தில் முதல்வர். இன்னொரு மாநில முதல்வர், ஊழல் புகார் காரணமாக பதவி இழந்தார். ஆனால் அவரோ, அரசியல் அனுபவமே சற்றும் இல்லாமல் அடுப்பங்கரையிலிருந்த அவர் மனைவியை, பெயருக்கு அம்மாநிலத்தின் முதல்வராக்கி விட்டு, அருகிலமர்ந்து மறைமுக ஆட்சி செய்தார்.


மற்றொரு மாநிலத்தில், ஒரு கட்சியின் தலைவர் முதல்வர். முழுமையாக இருந்து முடித்த பின், இப்போது அவருடைய மகன் முதல்வர். அவரும், மருமகளும் பார்லிமென்ட் உறுப்பினர்கள். இன்னொரு மாநிலத்தில் தந்தை மத்திய அமைச்சர். அவருடைய மாநிலத்தில் மகன் முதல்வர்.போன வருடம், ஒரு மாநிலத்தில் தந்தை முதல்வர். மகன் துணை முதல்வர். மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மற்றொரு மனைவியின் மகள், பார்லிமென்ட் உறுப்பினர். சில ஆண்டுகளுக்கு முன், அவருடைய அக்கா மகன் மத்திய அமைச்சர். அவருடைய மறைவுக்குப் பின், மறைந்த மருமகனின் மகன் மத்திய அமைச்சர்.


இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்! : சுயநலம், சொந்த பந்தங்கள் நலம், தங்கள் தொழில் நலம், பிரமிக்கத்தக்க வகையில், அசுர வேகத்தில் அசாத்திய சொத்து சேர்த்தல் ஆகியவை தான், இன்றைய அரசியல்வாதிகளின் தலையாய நோக்கம். அந்த நோக்கத்தின் உந்துதலால் கோடிக்கணக்கில் கொட்டிக் கொழிக்கும், கம்பெனிகளின் கைப்பாவைகள் ஆகிவிடுகின்றனர்.

இந்த அரசியல்வாதிகளா, 80 கோடி ஏழை எளிய மக்களை வாழ வைக்கப் போகின்றனர்?சட்டத்தின் ஆட்சி என்பது, மக்களாட்சியின் மாட்சி. ஆனால், அது நம் நாட்டில் கொழுந்து விட்டு எரியும் ஊழல் விளக்கில் வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி. வடிகட்டிய சண்டாளனின் இறுதிப் புகலிடம் அரசியல் என, யாரோ ஓர் அறிஞன் சொன்னான். ஆனால், இந்தியாவில் அது தான் அவன் முதல் புகலிடம். இந்தியா அழிகிறது! அதைக் காப்பாற்ற போராடுவோம்.-

என்.கே.வேலு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)இ-மெயில்: nkveluadsp@gmail.com

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
20-ஜன-201318:56:44 IST Report Abuse
kundalakesi மக்கள் எதை விரும்புகின்றார்களோ அதுதான் கிடைக்கும். பெரும்பான்மை மக்கள் திறமை தேவையை விட ஒதுக்கீட்டு தேவைதான் சமூகத்தை உயர்த்தும் என்று வாதாடி போராடி பெறுகிறார்கள். மிகப் பெரும்பான்மையோ பிரியாணியும் கைக்காசும் போதும் என்றிருக்கிறார்கள். எவனாவது ஆன்மிகம் என்றால் பொஇக்கெசு போட்டு உள்ளே தள்ளி வேடிக்கை பார்க்கிறார்கள். நிஜ நிஜ கொள்ளையர்கள் குஷாலாக வளைய வர்கிறார்கள். நிச்சயம் புரட்சி வரும். அனால் இன்னும் முற்றவில்லை. 20 ஆண்டுகளாவது ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
20-ஜன-201318:32:30 IST Report Abuse
p.saravanan அரசியல் கட்சிகள் எளிமையனவர்களையும் , திறமையானவர்களையும், நேர்மையானவர்களையும் மக்களிடம் நெருங்கி பழகும் குணம் உள்ளவர்களை தேர்தெடுக்க வேண்டும்.பணப் பட்டுவாடா தொகுதிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு கொடுக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
20-ஜன-201317:50:55 IST Report Abuse
M.P.MADASAMY இனி இந்தியாவ அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.உத்தமனையும் ஊழலுக்குள் தள்ளி விடுவதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
20-ஜன-201317:14:56 IST Report Abuse
Durai selvaraju தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும் - மறுபடி தர்மமே வெல்லும்.... சத்தியம் என்றைக்குமே தோற்றதில்லை...
Rate this:
Share this comment
Cancel
panneerselvam - thajore,இந்தியா
20-ஜன-201310:39:52 IST Report Abuse
panneerselvam இந்தியாவின் ஒரே எதிர்காலம் ஆம் ஆத்மி கட்சிதான்.. சாமானியன், பாமரன், சாதாரண மனிதனின் கட்சி..
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
20-ஜன-201310:15:05 IST Report Abuse
P. Kannan உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. சமிபத்தில் தலைநகரில் ஒரு பெண்ணின் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக மக்கள் கிளம்பியது இந்த உலகத்தையே உலுக்கியது. அது என்ன என்று தெரிகிறதா, மக்கள் அடக்கப்படுகிறார்கள் , அந்த மன அழுத்தம் எங்கேனும் தவறு நடக்கும் பொழுது வெகுண்டு எழுகிறது, 500 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைகளாக இருந்த மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர சுவாச காற்றை சுவாசித்தவர்களுக்கு சுதந்திரத்தின் மகிமை அடிமனதை சென்று அடைந்து விட்டது. அந்த அடிமனதின் செயல் எல்லாம் அனிச்சை செயல்கள் தான். ஒரு பொறி பறந்தால் போதும். டெல்லியில் நடந்த போது நமக்கும் இங்கே நரம்புகள் முறுக்கேறியதே. நீங்கள் கூறியது போல் மக்களால் ருத்திர தாண்டவம் ஆட வெகு நேரம் ஆகாது. அடுத்தது புரட்சி தான் வெடிக்கும், அதன் வெளிப்பாடே டெல்லி ஆவேசம்.
Rate this:
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
20-ஜன-201310:13:19 IST Report Abuse
Karam chand Gandhi நேர்மையான குடிமக்கள் தேவை.?
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
20-ஜன-201309:10:51 IST Report Abuse
K.Balasubramanian நண்பர் வேலு நன்றாக எழுதியுள்ளார் . Politics is the last resort to scoundrels என்ற பெர்னார்ட் ஷா வாசகம் நன்றாக நினைவு கூறப்பட்டு உள்ளது . நம் நாட்டின் குறிக்கோள் "சத்யமேவ ஜெயதே " என்ற முண்டக உபநிஷத் வாசகம் . தத்துவங்கள் காலம் தாழ்ந்தாலும் பொய்ப்பதில்லை .
Rate this:
Share this comment
Cancel
p.raj-chennai - chennai,இந்தியா
20-ஜன-201306:01:04 IST Report Abuse
p.raj-chennai சொரணை கெட்ட வாக்காளர்கள் மீண்டும் 70% வாக்களிக்க வரிசையில் நிற்ப்பார்கள். மானியம் என்ற பெயரில் அவர்களுக்கும் வங்கி கணக்கில் மாத மாதம் பணம் வரும் , பிரியாணி மற்றும் இதர பானங்கள் கிடைக்கும். ஆனால் மக்கள்புரட்சி வெடிக்கும் போது இவர்களும் இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் லட்ச கணக்கான மக்களால் அடி பட்டு மிதி பட்டு முகவரி அற்று மண்ணோடு மண்ணாக படுவார்கள். .....படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
soundararajan - Udumalaipettai,இந்தியா
20-ஜன-201305:40:48 IST Report Abuse
soundararajan எல்லாம் சரிதான்.. ஆனால், வாரிசுகளை பதவியில் அமரவைப்பதும் இதே மக்கள்தானே ? தேர்தல் மூலமாகத்தானே வாரிசுகள் வருகிறார்கள்... எனவே , மக்களுக்கும் முதலில் விழிப்புணர்ச்சி தேவைபடுகிறது.. அதற்க்கு கல்வி ஒரு முக்கிய காரணியாகும்... முதலில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி தரும் சட்டம் வரட்டும். எல்லோரும் கல்வி கற்கட்டும். தெளிவு பெறட்டும்.. அதற்குள் நாடு எங்கேயோ போய் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை