growth of local channels ... Control: "Troy," the Federal Government asking for advice | உள்ளூர் சேனல்களின் அசுர வளர்ச்சிக்கு...கட்டுப்பாடு:"டிராய்' இடம் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உள்ளூர் சேனல்களின் அசுர வளர்ச்சிக்கு...கட்டுப்பாடு:"டிராய்' இடம் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி:நாடு முழுவதும் காளான்கள் போல பெருகியுள்ள, உள்ளூர் கேபிள், "டிவி' சேனல்களைக் கட்டுப்படுத்த, ஆலோசனை வழங்கும்படி, மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்'யை, மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கேபிள், "டிவி' ஆபரேட்டர்கள் உதவியுடன், உள்ளூரில் மட்டுமே ஒளிபரப்பாகும் வகையிலான சேனல்கள், சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் லாபித்து இருக்கின்றன. செயற்கைக்கோள் வழியாக ஒளிபரப்பாகும், தனியார் "டிவி' சேனல்களை, மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள் அஞ்சல் செய்து வருகின்றனர். இவர்களின் கேபிள் ஆபரேட்டர்கள் இருப்பர்; கட்டணச் சேனல்களை இவர்கள் வழியாக மட்டுமே பார்க்க முடியும்.இது இல்லாமல், குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே ஒளிபரப்பை வழங்கி வரும், தரை வழியாக ஒளிபரப்பாகும் சேனல்களை மட்டுமே அஞ்சல் செய்யக்கூடிய, சிறிய அளவிலான கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இதன்மூலம், உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இவ்வாறு ஒளிபரப்பாகும், உள்ளூர் சேனல்கள் எண்ணிக்கை, காளான்கள் போல் அதிகரித்துள்ளன. இவர்கள் முழுக்க முழுக்க, உள்ளூர் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள், உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.இவ்வாறு, இரண்டாம் தர, மூன்றாம் தர நகரங்களில், தனியார் "டிவி' சேனல்களை விட, உள்ளூர் சேனல்கள் பிரபலமாக இருப்பதும் உண்டு. உள்ளூர் சேனல்களாக இருந்து, சேட்டிலைட் சேனலாக மாறியவையும் உண்டு.
"உள்ளூர் சேனல்களைப் பார்த்து, பயந்த மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள், இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறி வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் சேனல்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர, மத்திய அரசு, களத்தில் இறங்கியுள்ளது.உள்ளூர் சேனல்களைக் கட்டுப்படுத்தவும், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் எத்தனை உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பலாம் என்பதை வரையறை செய்ய, ஆலோசனை வழங்கும்படி, "டிராய்' என்ற மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை, மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் நாடியுள்ளது.
இதுகுறித்து, அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:சில கேபிள் ஆபரேட்டர்கள், உள்ளூர் சேனல்களை குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி ஒளிபரப்புகின்றனர். அனுமதிக்கப்பட்ட தனியார் "டிவி' சேனல்களுக்கு இணையாக, உள்ளூர் சேனல்களை எவ்வித அனுமதியும் இன்றி ஒளிபரப்புகின்றனர்.எனவே, உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பும், கேபிள் ஆபரேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், சில நடைமுறைகளை அமல்படுத்த உள்ளோம். இதற்கான ஆலோசனையைத் தான் டிராயிடம் கேட்டு உள்ளோம்.
உள்ளூர் செய்தி மற்றும் நாட்டு நடப்பு விஷயங்களை ஒளிபரப்புவதையும், வரன்முறை படுத்துவது தொடர்பாக ஆலோசனை கேட்டு உள்ளோம். ஒரு கேபிள் ஆபரேட்டர், எத்தனை உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பலாம், எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.உள்ளூர் சேனல் என்றால் அதற்கான வரன்முறை, எல்லை வரம்பு, பதிவு, கட்டணம், விதிமுறைகள், ஆகியவை குறித்து முடிவு செய்து தரும்படி, டிராயிடம் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கேபிள் "டிவி' டிஜிட்டல்மயம்நிறைவேறும்: அரசு நம்பிக்கை:""கேபிள், "டிவி' டிஜிட்டல்மயமாவது, 38 நகரங்களில், கெடு விதிக்கப்பட்ட மார்ச் 31ம் தேதிக்குள் முடிந்து விடும்,'' என, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சக செயலர் உதய் குமார் கூறியதாவது:கேபிள், "டிவி' ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குவது, முதல் கட்டமாக, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக, 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.இதில், புனே, லூதியானா, அமிர்தசரஸ், உட்பட 38 நகரங்களில், மார்ச், 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்க, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும், சிறப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த, 38 நகரங்களிலும், 1.6 கோடி, "செட் ஆப் பாக்ஸ்'கள் தேவை என, மதிப்பிடப் பட்டுள்ளது.லூதியானா, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில், 90 சதவீதம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அதிகமாக உள்ளது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செட் ஆப் பாக்ஸ்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கெடு தேதிக்குள், முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை