புதுடில்லி:ஆந்திராவில், தெலுங்கானா பிரச்னையை மையமாக வைத்து, மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், பல்வேறு தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள், நீண்ட நாட்களாக, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னைøயை மையமாக வைத்து, ஆந்திர அரசியலில், அவ்வப்போது, குழப்பம் எழுவது உண்டு.தெலுங்கானா பிரச்னைக்காக, காங்கிரஸ், டி.ஆர்.எஸ்., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கலக குரல் எழுப்புவது உண்டு. அதிலும், ஆளும் கட்சியான காங்கிரசைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், இந்த பிரச்னைக்காக, ராஜினாமா செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
போராட்டத்தின் தீவிரம் குறைந்ததும், இந்த அரசியல் எதிர்ப்புகள் அனைத்தும், அடங்கி விடும். சில காலமாக அடங்கிப் போயிருந்த இந்த விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. "தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து, இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்' என, காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசு தெரிவித்துள்ளதால், ஆந்திர அரசியல் கட்சிகளிடையே, பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.தெலுங்கானா அல்லாத பிற பகுதிகளான, ராயல்சீமா போன்ற பகுதிகளைச் சேர்ந்த, அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், மாநில பிரிவினைக்கு எதிராக, போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இந்த பகுதிகளைச் சேர்ந்த, முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், "ஓட்டு கிடைக்கும் என்பதற்காக, மாநிலத்தை பிரிப்பது, தவறான நடவடிக்கை. இது, தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்.இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்கு, மத்திய அரசே, பொறுப்பேற்க வேண்டும்' என, எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மாநில அமைச்சருமான, ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது:ஆந்திராவின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்களும், தெலுங்கு மொழியில் தான் பேசுகின்றனர். மொழி ரீதியாகத் தான், மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கும்போது, தெலுங்கு மொழி பேசுவோரை, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களாக பிரிக்க கூடாது.ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தால் கிடைக்கும் நன்மை, ஒன்றுக் கும் மேற்பட்ட மாநிலங்களாக பிரித்தால், கிடைக்காது. இது, பல்வேறு பிரச்னைகளுக்கும், முட்டுக் கட்டையாக இருக்கும்.
ஒருவேளை, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்து, ஆந்திராவை பிரித்தால், அதற்கு எதிராக, வரலாறு காணாத போராட்டங்களை நடத்தவும், உயிர் தியாகம் செய்யவும், தாயாராக உள்ளோம்.இவ்வாறு, ஸ்ரீனிவாசராவ் கூறினார்.ஆனால், தெலுங்கானா ஆதரவாளர்கள், இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில அமைச்சரும், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவருமான, ஜனா ரெட்டி கூறியதாவது:தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்காக, பல்வேறு அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்தாகி விட்டது.
ஏராளமான உயிர்களை பலி கொடுத்து விட்டோம். கடும் நெருக்கடிகளை சந்தித்து விட்டோம். இப்போது தான், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது, ஆச்சர்யமாக உள்ளது. ஒரு சில தலைவர்கள், சுய நலனுக்காக இந்த பிரச்னையை திசை திருப்பி, ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.இவ்வாறு, ஜனா ரெட்டி கூறினார்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால், ராயல்சீமா உள்ளிட்ட, ஆந்திராவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனி மாநிலம் அமைக்காவிட்டால், தெலுங்கானா ஆதரவாளர்களின் நெருக்கடியை சந்திக்க வேண்டிஇருக்கும்.இதனால், மத்திய அரசு, கடும் குழப்பத்தில் உள்ளதாகவும், இந்த பிரச்னையால், ஆந்திராவில் மீண்டும் ஒரு அசாதாரணமான, அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.