Extinction of Street Drama | "கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?

Added : ஜன 20, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"கலையால வளர்ந்த உடம்பு, பிழைப்புக்காக கல்லு தூக்குது' ; கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?

தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான, கூத்துக்கலை அழிந்து வருவது, வரலாற்று சோகமே... இவற்றில், தெருக்கூத்து, மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. தற்போது, கூத்துக் கலைஞர்கள், தங்கள் பரம்பரை கலை தொழிலை விட்டு விட்டு, பிழைப்புக்காக, மாற்று தொழிலில் ஈடுபடுகின்றனர். இப்படி பிழைப்பதற்காக, சென்னைக்கு வந்த, தெருக்கூத்து கலைஞர் ராமன்,65, என்பவரிடம் பேசியதில் இருந்து...
உங்க சொந்த ஊர்?

என் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். எங்க பிழைப்பே, கூத்து கட்டுறது தான். கிராமம் கிராமமா தெருக்கூத்து கட்ட போவோம். அப்படி மத்த ஊருக்கு போகும் போது, எங்க குடும்பம் மொத்தமும் போயிடுவோம்; கூத்துக் கட்டும் நாட்களை மறக்கவே முடியாது.
என்னென்ன வேஷங்கள் இடம்பெறும்?

பயிர் அறுவடை முடியுற, ஏப்ரல், மே மாசத்துல தான், விவசாயிகள் வேலையில்லாம இருப்பாங்க. எல்லா ஊர்லயும், கூத்துக்குன்னு ஒரு திடல் இருக்கும். திடல் இல்லாத இடத்துல, பயிர் அறுவடை முடிஞ்ச விளை நிலத்துல கூத்துக் கட்டுவோம். கூத்துல, முக்கிய கதாபாத்திரத்துக்கு கட்டியங்காரன்னு பேரு. கூத்தை தொடங்கி வச்சி, இடையில ஏதாவது கதாப்பாத்திரம் எடுத்து, முடிவுல கருத்து சொல்ற கட்டியங்காரன் கதாபாத்திரத்தில், இடையிடையே காமெடி,"சீன்'களும் இருக்கும். இந்த கட்டியங்காரனை போல, ஒவ்வொரு கதைக்கும், பல முக்கிய கதாபாத்திரங்கள் உண்டு.

மக்கள் விரும்பும் புராண கதைகள் எவை?

ராமாயணம், சிலப்பதிகாரம், ரதி மன்மதன் என, எல்லா புராண கதைகளையும் மக்கள் ரசிப்பர். எந்த கதாபாத்திரங்கள் ஆனாலும், கூத்துக்கலைஞர்கள் அதில் ஒன்றிவிட வேண்டும். பல சுற்று ஒத்திகை முடித்த பின்பே, களத்தில் கூத்தை அரங்கேற்றுவோம். தெருக்கூத்து அரங்கேறும் முன், நகைச்சுவை கதைகளை கூறி, கதை சுருங்க சொல்லுவோம். அரண்மனை குறித்து, நடிக்க போகிறோம் என்றால், ராஜா, ராணி, அமைச்சர் என, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், திரைக்கு பின்னால் இருந்து, பாட்டாக பாடி அறிமுகப்படுத்திய பின்னரே, கதை துவங்கும்.

தெருக்கூத்து போடும் போது, எங்கு தங்குவீர்கள்?

குடும்பத்தோடு தெருக்கூத்து போடும் ஊருக்கே சென்று விடுவதால், எந்த மாவட்டத்திற்கு செல்கிறோமோ, அங்கிருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் தெருக்கூத்து கட்ட சென்று விடுவோம். அங்கேயே குடிசை கட்டி தங்குவோம். ஊர் மக்கள் வீட்டிலோ, முக்கியஸ்தர்கள் வீட்டிலோ, எங்களுக்கு உணவு தயாராகும்.


எங்களுக்கு, தெருக்கூத்து, விழாக்கூத்து, பறைமேளக்கூத்து, பறையாட்டம், கரகாட்டம் என, எல்லா விதமான கூத்து வகைகளும் தெரியும். அதனால, வருஷம் முழுவதும், எங்களுக்கு வேலை இருக்கும். எங்கேயாவது விழாக்கள் நடக்குதுன்னா, எங்க அப்பா, "ஆர்டர்' பிடிச்சிடுவாரு. எங்கப்பாவை நம்பி, 20 குடும்பம் இருந்துச்சு. ஆனா, இப்போ, எல்லாரும், எங்க உயிர் மூச்சான கூத்தை விட்டுட்டு, வேறு தொழில்கள்ல இறங்கிட்டோம்.

வேற வேலைக்கு போக காரணம்?

வயிறு தான். எங்கப்பா, 15 வருஷத்துக்கு முந்தியே இறந்துட்டாரு. எங்கப்பா இறந்த பின், யாரை பிடிக்கணும், எங்க, "ஆர்டர்' வாங்கணும்னு எதுவுமே எங்களுக்கு தெரியாது. அப்படியும் இழுத்து பிடிச்சி, வண்டிய ஓட்டுனோம். ஆனா, கிராமத்து மக்களுக்கே தெருக்கூத்து பார்க்கும், ஆர்வம் குறைஞ்சதால, தொழில் நடத்த முடியல. என்னை போல எல்லாருக்கும் குடும்பம் இருந்ததால, எத்தனை நாளைக்கு தான், சம்பளமே கிடைக்காம கூத்து கட்டுறது. குழந்தைகளோட பசியை போக்க வேண்டுமே, வேற வேலையை தேடிக்கிட்டு, கூத்துக்கட்டறதை விட்டுட்டோம். நான் மட்டும், கொஞ்ச நாள் எங்க கிராமத்துலயே, கூலி வேலை செய்தேன். சரியா கூலி வேலையும் கிடைக்கல. அதனால், வேலை தேடி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சென்னைக்கு வந்தேன். கட்டுமான தொழிலில் கூலியாளாக வேலை செய்றேன்.
கூத்துகலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்?: இப்போ, மக்களோட நேரத்தை செலவிட, நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் வந்துடுச்சி. கலையால வளர்ந்த உடம்பு இப்போ கல்லு தூக்குது. என்னை மாதிரி பல கலைஞர்கள் வறுமையில வாடுறாங்க. முதல்ல நானும், கலையை வளக்கறேன்னு தான், வீர வசனம் பேசுனேன். வயித்துக்கு கஞ்சியே கிடைக்க வழியில்லாத போது, எத்தனை நாளைக்கு வெட்டி பேச்சு எடுபடும். கலைஞர்களுக்கு அரசு உதவுது. ஆனா, அந்த உதவித்தொகை கிடைக்க, எங்க முறையிடணும்னு கூட எங்களுக்கு தெரியாது. தெருக்கூத்து, இந்த தலைமுறைக்கு அவசியமில்லாத கலையாயிடுச்சி. இதை வளர்த்தெடுக்கணும்னா, அழிந்து வரும் கிராமிய கலைகளின் நுட்பத்தை வரும் தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
20-ஜன-201318:03:08 IST Report Abuse
M.P.MADASAMY பழமை விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவிட்டு வெகு நாட்களாகிவிட்டது.பாரம்பரிய தொழில்கள் ,கலைகள் அழிந்து வருவதால்,பிழைப்புக்கு வேற தொழிலை நாடும் அதே வேளையில் கலையை பக்கத்தொழிலாக செயல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றே கூற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
20-ஜன-201316:00:27 IST Report Abuse
dori dori domakku dori தற்போது நல்ல வருமானம் உள்ள கோவில்களின் வாசலில் மேடை போட்டு , அந்த அந்த சாமிகள் சம்பந்த பட்ட புராண கூத்துகள் அற நிலையதுரையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு , இவர்களுக்கு சன்மானங்கள் செய்யலாம் , நாளடைவில் மக்களும் ரசனை மேம்பட்டு ஆதரவு தருவார்கள் . ஆனால் கூத்து கலைஞ்சர்கள் , ஆபாச நடனம் உடை விசயங்களில் கவனமுடன் இருக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
20-ஜன-201309:55:47 IST Report Abuse
P. Kannan மாற்றம் என்ற சொல்லை தவிர மற்றவை எல்லாமே மாறிக்கொண்டு தான் இருக்கிறது. பேஜர் என்று ஒரு கருவி சில வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலம். செல்போன் எப்பொழுது வந்ததோ பேஜர் காணாமல் போய்விட்டது. அதே போல் சலவைத் தொழிலாளி முன்பு போல் சலவை செய்வது இல்லை, சலவை செய்வதை மக்களே பார்த்து கொள்கிறார்கள். சலவை தொழிலாளி தற்போது ஸ்திரி மட்டுமே செய்கிறார். பாதிக்க பட்டவர்கள் உடனே மாற்று த்தொழிலை யோசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
20-ஜன-201306:02:02 IST Report Abuse
kundalakesi வருந்த தக்க விஷயமே. மருந்து இட்ட பயிர்களால் பூச்சிகள் கிடைக்காத குருவிகள் அழிவது போல், சின்னத்திரயிட்ட கிரக்கத்தால் நாடகம் நாட்டியம், மேடைக் கச்சேரி , கூத்து பொம்மலாட்டம் எல்லாம் இனி இல்லை என்றாகும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை