திருப்பூர்:""இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்,'' என முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்தார்.திருப்பூரில் நடந்த சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், பங்கேற்றார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:முதுகுவலி உள்ளிட்ட பாதிப்புகளால், இந்திய அணியில் என்னால் இடம்பெற முடியவில்லை. சச்சினை பார்த்து, கிரிக்கெட்டுக்கு வந்தவன் நான்.
அவருடன் சேர்ந்து விளையாடிய நாட்கள், மறக்க முடியாதவை.விளையாட்டை பொருத்தவரை எதிர்பாராத தோல்வியும், வெற்றியுமே, அதை சுவாரசியப்படுத்துகிறது.மும்பை, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில், இந்திய அணியில் வாய்ப்பு தருவதாக பொதுவான கருத்து நிலவுகிறது. சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது வருத்தமளிக்கிறது. நம் வீட்டில் உள்ள ஒருவர் விளையாடுவதை விட்டு விட்டதைபோல் தோன்றுகிறது.தோனி கேப்டனாக நீடிப்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன; விராத் கோலி போன்றோருக்கு கேப்டன் வாய்ப்பு தரலாம். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு தர வேண்டும்; முதலில் இரண்டு ஆண்டுகள் அவர்கள் சிரமப்பட்டாலும், நாளடைவில் சிறந்த வீரர்களாக வரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.