பள்ளிபாளையம்: தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பிராணிகள் கருத்தடை மையம் அமைக்க, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் பீதியில் சென்று வரும் அவலம் நீடித்து வருகிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம், புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையம், சின்னாக்கவுண்டம்பாளையத்தில், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள முடிவை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.