பதிவு செய்த நாள் :
கருத்துகள் (7)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஆ ந்திர மாநிலம், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் ஓரங்களில் பயிர் செய்யும் விவசாயிகள், ஆயில் இன்ஜின் மூலம், பம்பு செட் பைப்புகள் பொருத்தி தண்ணீரை எடுத்து விவசாயம் செய்கின்றனர். வீட்டுத் தேவைகளுக்கு, லாரிகள் மூலமும் கிருஷ்ணா நீரை எடுத்துச் செல்வதால், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், வெங்கடகிரி பகுதியில், 7.04 கோடி ரூபாயில் புதிய ஏரி அமைத்து, கால்வாயில் இருந்து தண்ணீரை திருப்பிவிடும் முயற்சியில், ஆந்திர மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக - ஆந்திர மாநில அரசுகள் இடையே கடந்த, 1983ம் ஆண்டு ஏப்., 18ம் தேதி, கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், 15 டி.எம்.சி., தண்ணீர் தரவேண்டும். இதில், மூன்று டி.எம்.சி., சேதாரம் போக, ஜூலை - டிசம்பர் மாதங்களில், எட்டு டி.எம்.சி.,யும், ஜனவரி - ஏப்ரல் மாதங்களில், நான்கு டி.எம்.சி.,யும் தண்ணீர் தரவேண்டும். இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, "ஜீரோபாயின்ட்' வரை, 152 கி.மீ., தூரம், பின் இங்கிருந்து போந்தவாக்கம், ஒதப்பை வழியாக பூண்டி ஏரிக்கு, 25 கி.மீ., தொலைவிற்கு கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. கால்வாய் கட்ட, 13 ஆண்டுகள் ஆனது.

முதன் முறையாக, 1996ம் ஆண்டு, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆந்திராவில் கால்வாய்களின் சேதம், சிலாப்புகள் சரிதல் போன்ற பல்வேறு காரணங்களால், பெருமளவு தண்ணீர் விரயமானது. தண்ணீர் திறந்து விடப்பட்டு, 10 நாட்களுக்கு பின், தமிழகஎல்லையான ஊத்துக்கோட்டை, "ஜீரோபாயின்ட்'டை அடைந்தது.

சீரமைப்பில் சாய்பாபா டிரஸ்ட் :கடந்த, 2006ம் ஆண்டு, ஸ்ரீ சத்ய சாய்பாபா டிரஸ்ட் மூலம், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கண்டலேறு அணையில் இருந்து பெருமளவு சேதமடைந்த கால்வாய்கள் கண்டறியப்பட்டு சீர்படுத்தப்பட்டன. சாய்பாபா டிரஸ்ட் சீர்படுத்தியது தவிர, 80 கி.மீ., தொலைவிற்கு கால்வாய்களில் சேதம் இருந்தது. இதற்காக, ஆந்திர மாநில அரசு, கண்டலேறு - வெங்கடகிரி, காளஹஸ்தி மண்டலம் என, இரு பிரிவாக பிரிந்து இரண்டிலும், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்தன.கால்வாய் பணிகள் அதிநவீன, "கான்கிரீட் பேவர் மெஷின்' மூலம் துரித கதியில் நடைபெற்றன. தற்போது, ஆந்திர மாநிலத்தில் வரதயபாளையம், சத்தியவேடு பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் கால்வாய் சேதமின்றி காணப்படுகிறது.பின், தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழக பகுதிகளிலும், ஸ்ரீ சத்ய சாய்பாபா டிரஸ்ட் மூலம் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக, கிருஷ்ணா நதிநீர் கால்வாய், "சாய் கங்கா' கால்வாய் என, அழைக்கப்படுகிறது.

தண்ணீர் திருட்டு :ஆந்திராவில் காளஹஸ்தி, வெங்கடகிரி, ராப்பூர் ஆகிய இடங்களில், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் ஓரம் உள்ள விவசாயிகள், தங்களின் விவசாய தேவைக்கு, ஆயில் இன்ஜின் பொருத்தி தண்ணீர் பெற்று விவசாயம் செய்கின்றனர். வெங்கடகிரி பகுதியில், ஒரு மேம்பாலம் கீழே உள்ள கால்வாயில், அப்பகுதி மக்கள் தங்களின் வீட்டுத் தேவைக்காக, லாரி மூலம் தண்ணீரை எடுக்கின்றனர்.அங்கு உள்ள பங்களா கிராமம் துவங்கி, நாகோல் ஊராட்சி, ஒட்டுப்பள்ளி கிராமம் வழியாக ராப்பூர் வரை ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை வெளியேற்றி, தங்களின்

விவசாயத் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். இதில் சில இடங்களில், கரையின் ஒரு பகுதியில் இருந்து மறு கரைக்கு, மின்ஒயர் மூலம் மின்சாரம் கொக்கி போட்டு திருடி, இன்ஜினை பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், "நெல் பயிர் வைத்துள்ள எங்களுக்கு போதுமான மழை இல்லை. இதனால், கிருஷ்ணா கால்வாயில் இருந்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை பெற்று தான் விவசாயம் செய்ய வேண்டி உள்ளது' என்றனர்.இதில், நாகலுபட்டு என்ற கிராமத்தில், பைப் மூலம் ஏரிக்கு தண்ணீர்
செல்வதை நிறுத்திய சம்பவத்தில் அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிதடி நிகழ்ச்சி நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ரூ.7 கோடியில் புதிய ஏரி:கண்டலேறு அணையில் இருந்து, வெங்கடகிரி வழியாக செல்லும் கால்வாயின் வலது புறத்தில், கொல்லசமுத்திரம் பகுதியில், 7.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,200 மில்லியன் லிட்டர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய புதிய ஏரி கட்டப்பட்டு வருகிறது. 7கிருஷ்ணா கால்வாயில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் எடுத்து, அங்கேயே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உள்ளது.

விழித்து கொள்ளுமா தமிழகம்?ஆந்திர மாநிலம், வெங்கடகிரி அருகே கொல்லசமுத்திரம் பகுதியில் கிருஷ்ணா நீரை திருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர அரசு, தொடர்ந்து கால்வாயின் ஓரம் மேலும் புதிய ஏரி கட்டும் முயற்சியில் ஈடுபட்டால், தற்போது காவிரி, முல்லை பெரியாறு தண்ணீருக்காக கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களிடம் கெஞ்சுவது போல், எதிர்காலத்தில் ஆந்திர அரசிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்க நம்மிடம் உள்ள ஏரி, குளம், குட்டைகளைசீரமைத்து, தண்ணீரை தேக்க வைக்க வேண்டும்.

தேவையான நீர் திறக்கப்படும்:ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றும், தலா, 5 டி.எம்.சி.,தண்ணீர் தரவேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தண்ணீர் ஸ்ரீசைலம் அணைக்கு அனுப்பி, அங்கிருந்து சோமசீலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் செல்லும். ""ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டது முதல் இதுவரை கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு சொட்டுநீர் கூட வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து தான், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம். தற்போது கண்டலேறு அணையில், 17.3 டி.எம்.சி., அளவிற்கு தான் தண்ணீர் உள்ளது. தற்போது, வினாடிக்கு, 500 கன அடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உப்பலமடுகு கால்வாய் சேதம் :வரதயபாளையம் அருகே, உப்பலமடுகு பகுதியில்கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையால், கிருஷ்ணா கால்வாய் பெருமளவு சேதம் அடைந்தது. இதனால், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வருவது தடைபட்டது. தற்காலிகமாக, 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மூன்று சிமென்ட் குழாய்கள் அமைத்து, மாற்று வழியில் கிருஷ்ணா நீர் வருகிறது. இதில் வினாடிக்கு, 400 கன அடி மட்டுமே தண்ணீர் செல்லும். இந்த கால்வாயை சீரமைத்தால் மட்டுமே, தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர்

Advertisement

கிடைக்கும்.இதுகுறித்து, ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "உப்பலமடுகு கால்வாய் சீரமைக்க, 4.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்' என்றார்.

தாகம் தீருமா?சென்னைக்கு குடிநீர் வழங்கும், நான்கு ஏரிகளின் நீர் இருப்பு இப்போதே அபாயகரமான நிலையில் உள்ளது. இருக்கும் நீரைக் கொண்டு இன்னும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.தெலுங்கு - கங்கை திட்டப்படி, சென்னைக்கு மே மாதத்திற்குப் பின் வினாடிக்கு, 1,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தால் தான் அக்டோபர் மாதம் பருவ மழை துவங்கும் வரை, நகர குடிநீர் வினியோகத்தை தடையின்றி மேற்கொள்ள முடியும். தெலுங்கு - கங்கை கால்வாயில் உடைப்பு, வழியெங்கும் நீர் திருட்டு தொடரும் போது இந்த அளவு தண்ணீர் வருமா என்பது சந்தேகம் தான்.மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும், நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள இன்னொரு நிலையத்தில் இருந்து, இதுவரை குடிநீர் வினியோகம் ஆரம்பமாக வில்லை. வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு முற்றிலும் குறைந்து விட்டது.இந்த சூழ்நிலையில், வரும் கோடை காலத்தில் சென்னை நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது உறுதி. இப்போதே மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதேபொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தொடர்ந்து கிருஷ்ணா நீர் வரும்:கண்டலேறு அணையில் இருந்து, இதுவரை 4 டி.எம்.சி., தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் தருவதாக ஆந்திர மாநில அரசு கூறியுள்ளது. வரதயபாளையம் அருகே, உப்பலமடுகு பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க வரும், 31ம் தேதி டெண்டர் வெளியிட ஆந்திர அரசு முடிவெடுத்து உள்ளதுபொதுப்பணித் துறை அதிகாரி, தமிழ்நாடு

மின்சாரம் பாயும் அபாயம்:வெங்கடகிரியில் இருந்து கிருஷ்ணா கால்வாய் ஓரம் உள்ள விவசாயிகள் கொக்கி போட்டு மின்சாரம் பெறுகின்றனர். இதில், கால்வாயின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு மின்ஒயர் பெறப்பட்டு, அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுகின்றனர். காற்று பலமாக வீசினாலோ அல்லது வேறு காரணங்களாலோ, கால்வாயின் மேல் செல்லும் மின்ஒயர் அறுந்து விழுந்தால், மின்சாரம் தண்ணீரில் பாய்ந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கால்வாய்கள் படுமோசம்:தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, "ஜீரோபாயின்ட்' முதல் அம்பேத்கர் நகர், போந்தவாக்கம், கரகம்பாக்கம், மயிலாப்பூர் வழியாக பூண்டி ஏரி வரை கால்வாய் உடைந்தும், சிலாப்புகள் சரிந்தும் காணப்படுவதால், தண்ணீரை இதன் வழியே மண் உறிஞ்சுகின்றன. இதனாலும், தண்ணீர் விரயமாகிறது. "கால்வாய்கள் சீரமைக்க டெண்டர் விடப்பட்ட நிலையில் தண்ணீர் நின்றவுடன் பணிகள் துவக்கப்படும்' என, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரி நிலவரம்:ஜன., 25ம் தேதி காலை, 6:00 மணி நிலவரப்படி ஏரிக்கு, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 132 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் தற்போது, 1,462 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்மட்டம், 28.73 அடி. இங்குள்ள இணைப்புக் கால்வாய் மூலம் வினாடிக்கு, 150 மில்லியன் கன அடியும், பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு, 20 கன அடி வீதமும், மொத்தம், 170 கன அடி நீர் திறக்கப்பட்டு, சென்னை புழலேரிக்கு அனுப்பப்படுகிறது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
30-ஜன-201309:30:35 IST Report Abuse
Raj விஸ்வரூபம் படத்தை தடை பண்ண போராடியவர்கள் இதற்காக என்ன பண்ணினார்கள்?
Rate this:
Share this comment
Cancel
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
28-ஜன-201308:57:38 IST Report Abuse
NVRAMANAN இப்படியே போன பணம் மட்டும் தான் கையிலே இருக்கும், மீதிக்கு தெருவில கிடைக்கணும்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
28-ஜன-201301:23:31 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒரு புறம் மக்களின் அறியாமை, மறுபுறம் அரசியல்வியாதிகளின் ஆக்கிரமிப்பு, நிலத்தடி நீராதாரம் அழிந்து போய்கொண்டே இருக்கிறது, கொள்ளிடம்,நெய்வேலி/வீராணம் நீர் சென்னைக்கு திருப்பபட்டபோது கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு பற்றி கண்டுகொள்ளவே இல்லை, இது எங்கே பாதிக்கும் என்றால், நிலத்தடி நீர் உவர்ப்பாக(கடல் நீரின் மேலேறு தன்மையால் ) மாறி மக்களின் வாழ்வாதாரம் போகும், வீராணம் ஏரியில் ஆக்கரிமிப்பு, நீர் கொள்ளளவு குறைந்து போக காரணமானது, மிச்சம் இருப்பது நெய்வேலி/சாய் கங்கா(இப்போ இதுக்கும் ஆந்திர ராயலசீமா மக்கள் வெட்டு வைக்குறாங்க) மாத்திரம் , பாப்போம்,எந்த வகையில் மக்கள் உணருகிறார்கள், இது இரு கழகங்களையும் குறித்தது அல்ல, ஆனால் மக்கள் உணர வேண்டிய தருணம், இல்லையேல் வரும் ஆண்டுகளில் உங்களது சந்ததியினர் அனுபவிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜன-201310:11:20 IST Report Abuse
g.s,rajan சென்னையில் மற்றும் புறநகர்ப்பகுதியில் பெருகி வரும் அடுக்கு மாடி வீட்டு குடியிருப்புகள் ,,அடுக்கு மாடி வணிக வளாகங்கள் இன்னும் நிலையை மோசமாக்கும் .சென்னை நோக்கிப்படை எடுக்கும் மக்கள் குறைந்தால் தான் குடிநீர் பஞ்சம் தீரும் .இல்லையேல் பஞ்சமே இல்லாத தட்டுப்பாடே வராத வேறு தண்ணியை குடிச்சு தான் "தாக சாந்தி ""பண்ணிக்கணும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-ஜன-201302:12:17 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅது தான் "அம்ம்மா" வோட திட்டமும்.,, தவித்த வாய்க்கு டார்கட் வைத்து தண்ணி விக்கும் தாரகையே ...ன்னு பள்ளு பாடுங்க.....
Rate this:
Share this comment
Cancel
Vijay - chennai,இந்தியா
27-ஜன-201303:18:58 IST Report Abuse
Vijay குடிநீர் பஞ்சமா????? ஐயோ,,, நெனைக்கவே பயமா இருக்கு........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.