லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும், "டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல் மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு, தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லும் பொறுப்பு, தி.மு.க.,வுக்கு இருக்கும் போது, மறைமுகமாக, தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது என, தி.மு.க., தரப்பு கருதுகிறது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், 16 சீட்டுகளை காங்கிரஸ் தரப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு தி.மு.க., தரப்பில், எட்டு தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என, கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, சுமூகமாக நடப்பதற்கு, ராகுலின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., தரப்பில் எழுந்துள்ளது. இதனால், காங்கிரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்க, இலங்கை தமிழர்கள் பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
இலங்கையில், இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை தடுத்து நிறுத்த. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சமீபத்தில் தி.மு.க., முன் வைத்துள்ளது.அடுத்த கட்டமாக, அடுத்த மாதம், 4ம் தேதி, "டெசோ' கூட்டம் சென்னையில் நடைபெறும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. "டெசோ' கூட்டம் நடத்துவதன் மூலம், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் சில கட்சிகள், தி.மு.க., தலைமையின் கீழ் அணிவகுக்க வாய்ப்பு உள்ளது.தொகுதி பங்கீடு மற்றும் ராகுல் செயல்பாட்டில் தி.மு.க., அதிருப்தி அடைந்தால், காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு, இலங்கை தமிழர்களை, ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் தி.மு.க.,விடம் திட்டம் உள்ளது. இது தொடர்பாக, சுவீஸ், ஜெர்மனி, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சிலர், கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்."நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என, வெளிநாடு வாழ் தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களை, தனது அறிக்கை வாயிலாக கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து, காங்கிரஸ் - தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, உர ஊழல் புகார், தி.மு.க.,விற்கு தலைவலியை உருவாக்கியுள்ளது.உர ஊழல் புகாரை வெளியே கொண்டு வருவதற்கு, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய புள்ளிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு புள்ளிக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சந்தேகம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட்டுகளை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் விரும்பவில்லை. அதிகபட்சம், அக்கட்சிக்கு, எட்டு சீட்டுகள் ஒதுக்கீடு செய்யலாம் என, தி.மு.க., தரப்பு கருதுகிறது.
ஆனால், இந்த தேர்தலில், மத்திய அமைச்சர்கள் வாசன், ஜெயந்தி நடராஜன் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், 16 சீட்டுகளை கேட்டு, தமிழக காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றி விடவும் தி.மு.க., தயங்காது. அதனால் தான், காங்கிரசுக்கு, "செக்' வைக்கும் வகையில், "டெசோ'வை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.தி.மு.க., தலைமையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளை ஒரு அணியில் சேர்த்து, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என, உலகத் தமிழ் அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ராகுலின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து, தி.மு.க.,வின் காய்கள் நகர்த்தப்படும்,இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
லாபமோ நஷ்டமோ - காங்கிரஸ் இப்போதே தி மு க வை கழட்டிவிட்டு, பொலிடிகல் ப்ளாக்மெயில் செய்யும் தி மு க தலைவரிடமிருந்து விடுபடலாம். அடுத்த தேர்தலில் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆகையால் காங்கிரஸ் தனித்து நின்றாலே நல்லது - விஜயகாந்தும் இன்னும் சில பல கட்சிகள் சேரும். அதுவே போதும். தி மு க இனி மண் குதிரை தமிழ் நாட்டில் (குடும்ப பூசல் வேறு). ராகுல் நல்ல முடிவு எடுக்கட்டும்.
ராகுல் எந்தகாலத்திலேயும் கருணாவை பொருட்டாக மதித்ததில்லை. இப்போது வேறு கட்சியின் முடி சூட்டு விழா நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக போல அழகிரி ஸ்டாலின் போன்ற ஆதிக்கம் காங்கிரசில் கிடையாது. ராகுல் எடுக்கும் முடிவுதான் எனவே கருணா அவர்களுக்கு 2014இல் பெப்பேதான். பிஜேபியும் இடம் கொடுக்காது. ஆக தேமுதிகவும் திமுகவும் மண்ணை கவ்வப்போவது உறுதி.
டெசோ மட்டுமல்ல இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எந்தச் செயலில் இறங்கினாலும் அவர்களை யாரும் நம்பப் போவதில்லை.ஈழத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரியும்.இது தேர்தல் கால நாடகம் என்று.முன்னாளில் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் மாட்டிக்கொண்டு மோசமான விளைவைச் சந்தித்தார்கள்.இப்போது உர ஊழல் வெளிவந்துள்ளது.காங்கிரசுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.எப்படி இதைப் பயன்படுத்தி தி.மு.க.வை வழிக்குக் கொண்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் l.காங்கிரசுக்கு சொந்தபலம் இல்லை எனவே அவர்களுக்கும் தி.மு.க.வை விட்டால் பிழைப்புக்கு வேறு வழி இல்லை. யார் எப்படிக் காயை நகர்த்தப் போகிறார்கள்.கூட்டணி பேரத்தில் யார் அதிக லாபமடயப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.முதுபெரும் அரசியல் தலைவரா அல்லது முந்தாநாள் துணைத்தலைவரான ராகுலா என்று.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.