நமது நாட்டைப் பொறுத்தவரை போட்டோ ஜர்னலிசத்தில் பெரிய ஆளாக மதிக்கப்படுபவர் ரகுராய். ஆனால் அவரோ மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு எனக்கு போட்டோ ஜர்னலிசத்தில் குருவே இவர்தான் என்று ஒருவரைச் சொல்வார்.
யார் அவர்
அவரே உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்களால் போட்டோ ஜர்னலிசத்தின் தந்தையாக கருதப்படுபவரான ஹென்றி கார்ட்டியர் பிரஸ்சன்.
1908ம்ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவரை இவரது தந்தை இவரை தமது குடும்ப தொழிலான ஜவுளித்தொழிலில் ஈடுபடுத்திப்பார்த்தார், அவருக்கு ஈடுபாடு இல்லை, பிறகு இசைப்பள்ளிக்கு அனுப்பிவைத்தார் ஒன்றும் பிரயோசனமில்லை, ஒவியப் பள்ளியில் காலடி எடுத்து வைத்தார் அதுவும் சரிப்பட்டு வரவில்லை கடைசியாக புகைப்படக்கலையை கையில் எடுத்தார் வாழ்க்கை கட,கடவென முன்னேறியது.
பிரௌனி பாக்ஸ் கேமிராவில் படம் எடுக்க ஆரம்பித்தார். 1937ம் ஆண்டு இவர் எடுத்து பிரசுரமான கிங் ஜார்ஜின் படம் இவருக்கு நிறைய புகழை தேடிக்கொடுத்தது. அதன்பிறகு இவரது ஓட்டம் நிற்கவே இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது இவர் தனது உயிரை பணயம் வைத்து எடுத்து வந்த படங்கள் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
பிறகு "லைப்' பத்திரிக்கைக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார், அப்படி அவர் எடுத்த காந்தியின் இறுதி ஊர்வலம், பெர்லின் சுவர் இடிப்பு, சீனா போர், ஸ்பெயின் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட படங்கள் இவரது பெயரை இன்றும் சொல்லிக் கொண்டு இருப்பவை.
நிறைய புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார், இவரைப்பற்றி நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார்.
இப்படி புகைப்படக் கலையின் மூலம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டார், திருமணம் முடித்தபோது இவருக்கு கிடைத்தது வீட்டு வேலை செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு அறையும், ஒரு பாத்ரூமும் கொண்ட வீடுதான்.இந்த பாத்ரூம்தான் இவருக்கு டார்க் ரூம். அந்த சின்ன ரூமில் இருந்து கொண்டுதான் பிலிம் டெவலப் செய்வது, பிரின்ட் போடுவது என்று மிகுந்த சிரமப்பட்டு உழைத்தார். உயர்ந்தார்.
புகைப்படக் கலையை ரசித்து செய்யும் போது ஒவ்வொரு கணமும் ஒரு அழகான தருணமே என்று சொன்ன பிரஸ்சன் 95 வயதில் ஒரு நிறைவு பெற்றார்.