தி.மு.க., தலைவர் கருணாநிதி: நடிகர் கமல், இஸ்லாமிய சமூகத்திடம் பாசமும், மதிப்பும், மரியாதையும் உடையவர். எனவே, "விஸ்வரூபம்' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல், பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அரசும், இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: கமல் பட பிரச்னை, பத்து நாளா பரபரப்பா ஓடிட்டு இருக்கு... ஆரம்பத்துலயே, இப்பிரச்னையில கருத்து தெரிவிக்காம அமைதியா இருந்தது ஏன்...? "ரஜினியே கமலை ஆதரிச்சுட்டாரு... நாமளும் ஆதரிக்கலைன்னா, நல்லாயிருக்காது'ன்னு நினைச்சு, இப்ப அறிக்கை வெளியிட்டு இருக்கீங்களோன்னு தான், எனக்கு, "டவுட்!'
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: தி.மு.க.,வில் எல்லாரையும் கைது செய்கின்றனர். என்னை கைது செய்யுங்கள் என, டி.ஜி.பி., அலுவலகம் சென்றபோது, கைது செய்ய மறுத்தனர். அப்படி என்ன தான் முதல்வருக்கு என் மீது பற்றோ தெரியவில்லை.
டவுட் தனபாலு: "என்னை கைது பண்ணுங்க'ன்னு டி.ஜி.பி., அலுவலகம் போய் வீர வசனம் பேசிட்டு திரும்பின கையோட, உங்க மேல வீடு அபகரிப்பு புகார் கொடுத்தவருக்கு, கோடிக்கணக்குல பணத்தை கொடுத்து, "செட்டில்' பண்ணி, புகாரை வாபஸ் வாங்க வச்சிட்டு, இப்ப, "பிளேட்'டை திருப்பி போடுறது ஏன்னு தான், எனக்கு, "டவுட்!'
பத்திரிகை செய்தி: அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, 152 முதல், 162 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 198 முதல், 208 தொகுதிகள் வரை கைப்பற்றும் என, கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
டவுட் தனபாலு: இந்த கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்துட்டு, "வாஜ்பாயும், அத்வானியும் என் நீண்ட கால நண்பர்கள்; இந்திரா அமல்படுத்திய நெருக்கடி கால நெருப்பாற்றில் சேர்ந்து நீந்தியவர்கள்'னு ஒரு, "பிளாஷ்பேக்' ஓட்டி, தே.ஜ., கூட்டணிக்கு எங்க ஊர் தலைவரு, இப்பவே துண்டு போட்டுடுவாரோன்னு தான், எனக்கு, "டவுட்!'