district news | நம்பினால் நம்புங்கள் ! வீடு தேடி வருகிறது கட்டட அனுமதிகோவை மாநகராட்சியில் அதிசய மாற்றம் !| Dinamalar

தமிழ்நாடு

நம்பினால் நம்புங்கள் ! வீடு தேடி வருகிறது கட்டட அனுமதிகோவை மாநகராட்சியில் அதிசய மாற்றம் !

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கோவைநகர அமைப்புப் பிரிவு அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளதால், லஞ்சம் தராமலே கட்டட அனுமதி, வீட்டுக்கு வரும் அதிசயம் கோவையில் நடந்து வருகிறது.
நகர ஊரமைப்புச் சட்டப்படி, 2 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட வணிக கட்டடம், 4 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு மட்டுமே, உள்ளாட்சிகளால் அனுமதி வழங்க முடியும். ஆனால், கோவை நகரில் நகர ஊரமைப்புத்துறை மட்டுமே அனுமதி வழங்கக்கூடிய பல அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கும், வணிக கட்டடங்களுக்கும் மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர்களால் முறைகேடான அனுமதி வாரி வழங்கப்படுகிறது.
இத்தகைய விதிமீறல் கட்டடங்களை இடிப்பது, "சீல்' வைப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து, அதிரடி செய்து வந்த உள்ளூர் திட்டக் குழுமமும் ஒரு மாதமாக முடங்கிக் கிடக்கிறது. நகருக்குள் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டிருந்த 55 கட்டடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடுக்கலாம் என்று உள்ளூர் திட்டக் குழுமத்தலைவர் கலெக்டர் பரிந்துரைத்து, பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையுமில்லை.
இதற்குக் காரணம், கோவை மாநகராட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நகர ஊரமைப்புப் பிரிவில் புரையோடிப் போயிருக்கும் லஞ்சம்தான். முன்பு ஒரு கட்டடத்துக்கு இவ்வளவு என்ற அளவில் லஞ்சம் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சதுர அடிக்கு இவ்வளவு என்று லஞ்ச வசூல் நடத்தப்பட்டது. இதுபற்றி, முதல்வர் வரையிலும் புகார்கள் பறந்தும் நகர அமைப்புப் பிரிவு அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.
மாநகராட்சி கமிஷனர் பொன்னுச்சாமி மட்டும் மாற்றப்பட்டார்; புதிய கமிஷனர் உடனடியாக நியமிக்கப்படாததால், நகர அமைப்புப் பிரிவு அலுவலர்களின் ஆதிக்கமும், வசூல் வேட்டையும் மேலும் தலை தூக்கியது. இதுபற்றி, மாநகராட்சி கமிஷனராக பொறுப்பு வகிக்கும் துணை கமிஷனர் சிவராசுவிடம் புகார்கள் குவிந்தன. அவரது அணுகுமுறை மற்றும் அதிரடி நடவடிக்கைகளால், கடந்த 10 நாட்களாக மாநகராட்சியில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன.
வசூலுக்காக, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன. நேரில் கையில் கொடுத்தால், அதை வைத்தும் வசூல் நடக்குமென்பதால், பதிவு தபாலில் இவை அனுப்பப்படுகின்றன. லஞ்சம் தராமலே கட்டட அனுமதி, வீட்டுக்கு வந்து சேர்வதால் விண்ணப்பம் வழங்கியவர்கள் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்துள்ளனர்.அது மட்டுமின்றி, கட்டட அனுமதிக்காக முதற்கட்ட லஞ்சம் கொடுத்த சிலரை நகர அமைப்பு அலுவலர்கள் அழைத்து, "கொடுத்ததை சொல்ல வேண்டாம்; மீதியைக் கொடுக்க வேண்டாம்' என்று கூறி, அவர்களுக்கான அனுமதியையும் தபாலில் அனுப்பி வைக்கும் அதிசயமும் அரங்கேறியுள்ளது.
நகர அமைப்புப் பிரிவினர்க்கு, மற்றொரு வகையில் "மாமூல் மழை' பொழிந்த விளம்பரப் பலகைகளுக்கும் "வேட்டு' வைக்கப்பட்டுள்ளது.
நகருக்குள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளுக்கும், மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அவை வைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பல மடங்கு சொத்துவரி விதிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால், பல நல்ல மாற்றங்கள் தென்படுகின்றன; புதிய கமிஷனர் வந்தாலும், வராவிட்டாலும் இது தொடர வேண்டுமென்பதே கோவை மக்களின் கோரிக்கை.
கோப்புகளில் கோலம்!
கட்டட அனுமதிக்காக வரும் விண்ணப்பங்களில், "பணம் வாங்கியது', "வாங்கிக் கொள்ளலாம்', "வாங்கவே முடியாது' என்பதைக் குறிப்பிடும் வகையில், பச்சை, மஞ்சள், சிவப்பு பென்சில்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டட அனுமதிக்கான கோப்புகளில் கோலங்கள் போடப்பட்டன. இப்போது, அதற்கும் வாய்ப்பளிக்காத வகையில், ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படுகின்றன; அல்லது நிராகரிக்கப்படுகின்றன.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை