சிவகாசி:விருதுநகர் மாவட்ட "டாஸ்மாக்' கடைகளில், அளவிற்கு அதிகமாக சரக்கு இறக்குவதால், பாதுகாப்பு கேள்விகுறியாகி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 209 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 40 சதவீத கடைகள் பாதுகாப்பு இன்றி உள்ளன. டாஸ்மாக் கடைகள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்தால் போதும் என்ற நோக்கில், கடைக்கான இடத்தை தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 16 லட்சம் முதல் 24 லட்சம்ரூபாய் வரை சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது. பல கடைகளில் "ஹாலோ பிளாக்' கற்களால் சுவர் எழுப்பட்டு, சிமென்ட் சீட் மேற்கூரை அமைத்துள்ளனர்.
ஊழியர்கள் இரவில் கடையை பூட்டி நிம்மதியாக செல்ல முடியவில்லை. ஹாலோ பிளாக் சுவர்களை சிறு கம்பியால் குத்தினால் கூட, ஓட்டை விழுந்து விடும். ஒரு கற்களை பெயர்த்து எடுத்துவிட்டால், திருட்டுக்கு வசதியாகிவிடும். இதேநிலைதான் மேற்கூரையும். கடைகளுக்கு தகுதி சான்று அளிக்கும் அதிகாரிகளை, வாடகைக்கு விடுவோர் கவனித்துவிட்டால், மோசமான கட்டத்திற்கு கூட தகுதிசான்று அளித்து, கடை நடத்த அனுமதிக்கின்றனர். டாஸ்மாக் மாதவாடகை 1500 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வாடகைக்கு நகரில் பாதுகாப்பான கடை எங்கும் கிடைப்பது இல்லை. பார்ஏலம் எடுத்தவர்கள் சம்பாதிக்கும் நோக்கில், பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், கடையை நடத்த அதிகாரிகளுக்கு "பிரஷர்' கொடுக்கின்றனர். திருட்டு, கொள்ளை நடந்தால் ஊழியர்கள் சஸ்பென்ட், மாறுதல் என பாதிக்கப்படுகின்றனர்.
கூடுதல் சரக்கு இறக்கம்: டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில்இரு முறை மதுபெட்டிகள் சப்ளையாகிறது. ஒரு கடைக்கு ஒருமுறை 100 பெட்டி தேவை இருந்தால், இலக்கை தாண்டி விற்க வேண்டும் என கருதி, அதிகாரிகள் மூன்று மடக்கு பெட்டிகளை இறக்குகின்றனர். இதனால், சிறிய கடைகளில் கூடுதல் பெட்டிகளை வைத்து பாதுகாக்க முடியாத அளவிற்கு, நெருக்கடிக்குள்ளாகின்றனர். கூடுதல் சரக்கு வந்தால்,பார்களில் பாதுகாப்பு இன்றி வைக்க வேண்டியுள்ளது.
பொங்கல் விடுமுறையின் போது சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சரக்குகள் அதிகளவில் வந்தது. கடைக்குள் வைக்க இடமின்றி, பார் இடத்தில் வைத்துவிட்டு சென்றனர். பொங்கலுக்கு கடை விடுமுறை விடப்பட்டது. விடுப்பு முடிந்து பார்த்த போது, 9பெட்டிகள் குறைவாக இருந்தது. விசாரிக்கையில் பார்ஏலம் எடுத்தவர் கடைவிடுமுறை பற்றி கவலைப்படாமல்,தடையின்றி மதுவிற்பனை செய்துள்ளார். கணக்கு ஒப்படைக்கும் போது, 8 பெட்டிகள் மட்டுமே எடுத்தாகவும், ஒருபெட்டி என்ன ஆனது தெரியவில்லை, என்றார். ஒரு சில கடைகளில்,சரக்கு வைக்க இடம் இன்றி அக்கம், பக்க அறைகளில், தற்காலிக வாடகை கொடுத்து, மதுபெட்டிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது.டாஸ்மாக்கில் பணத்தை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. இடநெருக்கடியில் பாதுகாப்பு பெட்டத்தை மூடும் வகையில் மதுபெட்டிகளை அடுக்கிவிடுகின்றனர். இதனால் பெட்டத்தில் பணம் வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
விற்பனை சரிவு: தற்போது நிலவும் வறட்சி, மின்தடையால், வேலை இழப்பு ஏற்பட்டு, பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால், டாஸ்மாக்கில் வியாபாரம் குறைந்துள்ளது. ஆனால் விற்பனையை அதிகரிக்க வேண்டும், விற்பனை குறைந்தால் நடவடிக்கை பாயும் என, ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இதனால் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.