"தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக, பிப்., 20, 21ல் நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,' என திருப்பூரில் நேற்று நடந்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்., 20, 21ல், நாடு தழுவிய அளவில் 48 மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஆயத்த மாநாடு, திருப்பூர் டவுன் ஹால் அரங்கத்தில் நேற்று நடந்தது. ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் பங்கேற்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் பிப்., 7ல், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், அக்குழுவை கூட்டி விவாதிப்பது,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பராயன் (ஏ.ஐ.டி.யு.சி.,) பத்மாநாபன்(சி.ஐ.டி.யு.,), ராமகிருஷ்ணன் (எல்.பி.எப்.,), சிதம்பரசாமி (பி.எம்.எஸ்.,), காளிமுத்து (எச்.எம்.எஸ்.,) உட்பட 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.