மும்பை: "தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர்' என, சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது."பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா குரல் கொடுத்திருந்தார். இதற்கு, கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வின் மற்றொரு கூட்டணி கட்சியான, சிவசேனா, "லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜை,பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' எனக்கூறி, பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.சிவசேனாவின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.,யுமான, சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "" பிரதமர் வேட்பாளருக்கு, சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜ் இருக்க வேண்டும் என, மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்து இருந்தார்,'' என்றார். குஜராத், ராஜ்கோட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அனுமதி அளித்ததற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சின்காவை தொடர்ந்து, மற்றொரு பா.ஜ., மூத்த தலைவர், ராம்ஜெத்மலானி மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டில்லியில், நிருபர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி கூறுகையில்,"" மோடி, 100 சதவீதம் மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்; பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக அவர் இருப்பார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும் என, ஒரு மாதத்திற்கு முன், தெரிவித்து விட்டேன். என் கருத்துக்கு ஆதரவாக, சின்கா பேசியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.