மயிலாடுதுறை: ""மொத்தமாக டீசல் வாங்கும் அமைப்புகளுக்கு விலையை உயர்த்தியதை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்,'' என, கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர், எம்பாவை எஸ்.யோகநாதன், செயலர் நாகு சுப்ரமணியன் ஆகியோர், வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நீர், மின்சாரம் இன்றி, தமிழகத்தில் படிப்படியாக விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்பு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், விவசாயம் என்றால் நஷ்டம் தான் என்ற நிலையில், விளை நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி
வருகின்றன. தமிழகத்தில், வேறு பிழைப்பு தெரியாதவர்கள் தான், தற்போது விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில், பல ஆண்டுகளாக, காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால், வறட்சியை தாங்கக் கூடிய கரும்பு பயிரை, விவசாயிகள், அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தில் பொதுத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் என, 47 ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி வரும் வாகன வாடகையை, அரசே ஏற்று வழங்கி வருகிறது. ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள், டீசல்களை ஆலையில் உள்ள பங்குகளில் பிடித்து செல்வது வழக்கம். தற்போது, மொத்தமாக டீசல் வாங்கக் கூடிய நிறுவனங்களுக்கு, வெளிச்சந்தையை விட, 11.81 ரூபாய் அளவிற்கு, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தனியார் பங்க்குகளை விட, கார்ப்பரேஷன் பங்க்குகளில் டீசல் விலை அதிகம் என்பதால், அனைத்து வாகனங்களும், தனியார் பங்க்குகளுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, டீசல் போடுவதில் முறைகேடுகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள, பங்க்குகளுக்கு பதிலாக, தனியார் பங்க்குகளுக்கு செல்லும் போது, பணம் இல்லாமல் டீசல் போடமாட்டார்கள். இதனால், கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் பெரிதும் பாதிப்படைவதோடு, வாடகை அதிகரிக்கும். இதனால் கூட்டுறவு ஆலைகளுக்கும், விவசாயிகளுக்கும் அதிக அளவில் சிரமத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளை பாதிக்காத வகையில், கார்ப்பரேஷன் மற்றும் கூட்டுறவு ஆலைகளுக்கு வழங்கப்படும், டீசலுக்கான விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இதை தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.