தர்மபுரி: தர்மபுரி அருகே நடந்த கலவரம் குறித்து, வருவாய் துறையினர் மறு மதிப்பீடு செய்து, கலவரத்தால், 7.32 கோடி ரூபாய் சேதம் அடைந்திருப்பதாக, அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். தர்மபுரி யூனியன், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, நாயக்கன்கொட்டாய் கிராமத்தில், கடந்த நவ., 7ம் தேதி, கலப்பு திருமணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில், நத்தம்காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 300 வீடுகள், சூறையாடப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து, கடந்த நவம்பர் மாதம், போலீசார் மற்றும் வருவாய் துறையினர், தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தினர். இதில், 3.50 கோடி முதல், 4 கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டிருப்பதாக, வருவாய் துறையினர் அறிக்கை தயார் செய்து, அரசுக்கு தாக்கல் செய்தனர். இந்த மதிப்பீடு தவறு என, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்தது. அதே நேரம், தேசிய ஆணையம், நவ., 12ம் தேதி, பாதிக்கப்பட்ட பகுதிகளை
பார்வையிட்ட பின், 7.32 கோடி ரூபாய் அளவுக்கு, சேதம் அடைந்திருப்பதாக, ஆணைய தலைவர் புனியா தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு மிக குறைவாக இருப்பதாக, ஆணையம் குற்றம்சாட்டியது. இதையடுத்து, போலீஸ் மற்றும் வருவாய் துறை சார்பில், தனித் தனியாக மறு மதிப்பீட்டு ஆய்வு நடந்தது. வருவாய் துறை சார்பில், ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் நடந்த மறு ஆய்வில், 7.32 கோடி ரூபாய் வரை, சேதம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கை தயார் செய்து, அரசுக்கு, கடந்த, 5ம் தேதி முன் மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. "உணவு, ஆடை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட, அனைத்து அடிப்படை தேவைகளும், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன' என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு நீடிப்பு : பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்பிய நிலையில், வெள்ளாளப்பட்டி, செல்லன்கொட்டாய், செங்கல்மேடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து, ஆண்கள் தலைமறைவாகியுள்ளனர். இதனால், இக்கிராமங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர், பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதோடு, பல விவசாயிகள், கால்நடைகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். பெண்களே, விவசாய பணிகளை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலவர வழக்கில், முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், இக்கிராமங்களில் போலீசாரின் கண்காணிப்பும், பாதுகாப்பும் தொடர்ந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.