நாகப்பட்டினம்: நீலம் புயல் ,மழையால் பாதித்தோருக்கு, நிவாரணம் வழங்காததை கண்டித்து, நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்., மாதம், தமிழகத்தை தாக்கிய நீலம் புயலால், நாகை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதில், தண்ணீரால் சூழப்பட்ட, கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த, 475 குடும்பத்தினர் தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் பாதித்த, பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ,2,500 ரூபாய் அரசு சுõர்பில் நிவாரணம் அறிவித்து, வழங்கப்பட்டது. நிவாரணத் தொகை, தங்கள் கிராமத்திற்கு வழங்கவில்லை. நிவாரணத் தொகையை உடன் வழங்க கோரி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த, 60 பெண்கள் உட்பட 200 பேர், நேற்று காலை 10:00 மணிக்கு, நாகை-தூத்துக்குடி இ.சி.ஆர்.,சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ.,ரவிச்சந்திரன், நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், கிராம மக்கள் மறியலை காலை 11:00 மணிக்கு விலக்கிக் கொண்டனர். ஒரு மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.