சிவகங்கை: சிவகங்கையில், பட்டா மாற்றித்தர, 300 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கைது செய்யப்பட்ட, சர்வேயருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிவகங்கை கோர்ட் உத்தரவிட்டது. சிவகங்கை, மீனாட்சி நகர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. மேல வாணியங்குடியில் இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்திற்கு, பட்டா மாறுதல் கேட்டு, 2000 டிச.,5 ல், சிவகங்கை தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். சர்வேயர் கிருஷ்ணமேனனுக்கு, தாசில்தார் பரிந்துரைத்தார். இந்நிலையில், பட்டா மாறுதல் செய்ய 800 ரூபாய் லஞ்சம் கேட்டார். டிச.,7 ல், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். லஞ்சம் பெற்ற சர்வேயரை, இன்ஸ்பெக்டர் முகமதுயாசின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. கிருஷ்ணமேனனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கருப்பையா உத்தரவிட்டார்.