புதுக்கோட்டை: வடிகால்கள் மாயமாகி போனதால், கழிவுநீர் வீடுகளை சூழந்துள்ளது. ஆத்திரமடைந்துள்ள அப்பகுதி மக்கள் கழிவு நீரை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட பெரியார்நகர் குடியிருப்பு பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாதாள சாக்கடை பணியின்போது இப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வடிகால்கள் அனைத்தும் சிதிலமடைந்தது. இதன்காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
வீடுகளை சுற்றி நாள்கணக்கில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், இதிலிருந்து வெளியாகும் துர்நாற்றம், கொசு தொல்லை போன்றவை குடியிருப்பு வாசிகளை நிலைகுலையச் செய்துள்ளது. டெங்கு ஒழிப்பு பணியின்போது அப்பகுதியில் முகாமிட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், வீடுகளை சுற்றி தேங்கியிருந்த கழிவுநீரை செப்டிக் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றினர். மேலும் சாலைப் பணியின் போது கழிவுநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.
வடிகால் அமைத்த பின்னரே சாலை அமைக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் நிபந்தனை விதித்தனர். இதை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஒரு வாரம் நீடித்த டெங்கு ஒழிப்பு பணிக்கு பின்னர், பெரியார்நகர் பகுதியை நகராட்சி ஊழியர்கள் எட்டிகூட பார்க்கவில்லை. தற்போது வீட்டை சுற்றி, இரண்டு அடிக்கு மேல் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் சாலை செப்பனிடும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. வடிகால் அமைத்த பின்னரே சாலைகளை செப்பனிடவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல், சாலைப் பணியை துவக்கியுள்ளதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, வடிகால் அமைக்க முன்வருமாறு முறையிட்டனர்.
அவர்களை சமாதானம் செய்த நகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், ""சாலை செப்பனிடுதல், வடிகால் அமைத்தல் ஆகிய இருபணிகளும் வெவ்வேறானவை. சாலைப் பணிகளுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளதால் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வடிகால் அமைக்கும் பணிக்கும் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும். குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் தேங்காதவாறு சாலை மட்டத்துக்கு வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வீடுகளை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர் உடனடியாக அகற்றப்படும்,'' என்றார். இதன்பின்னரே நகராட்சி அலுவலகத்தைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.