திருச்சி: மாநகராட்சிக்கூட்டத்தில் களேபரத்தில் ஈடுபட்ட தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வத்தை, ஒரு கூட்டத்தில் பங்கேற்க மேயர் ஜெயா அதிரடியாக தடை விதித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி, அவசர மற்றும் சாதாரணக்கூட்டம், கடந்த, 28ம் தேதி நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அரியமங்கலம் கோட்டத்தலைவர் சீனிவாசன், தமிழக முதல்வரை பாராட்டியும், மத்திய அரசு மற்றும் தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்துக்கு ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்த நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., மாநகராட்சித்தலைவர் அன்பகழன், "மக்கள் பிரச்னைகள் ஏராளமாக இருக்க, மாநகராட்சிக்கு தொடர்பில்லாத விஷயங்களை மன்றத்தில் பேசுவது கண்டிக்கத்தக்கது' என்றார்.
தீர்மானத்தை வாசிக்க விடாமல், தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், கோட்டத்தலைவர் சீனிவாசனை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை பாதுகாக்கும் பொருட்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அரண்போல பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.
அதையும் மீறி, சீனிவாசன் வைத்திருந்த தீர்மான பேப்பரை முத்துச் செல்வம் பறிக்க முயன்றார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், முத்துச்செல்வம் அ.தி.மு.க., கவுன்சிலர்களை தாக்கினர்.
ஆத்திரமடைந்த, அ.தி.மு.க., பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், முத்துச்செல்வத்தை ஓங்கி அறைந்தார். அவர் விலகிக்கொண்டதால் தோள்பட்டையில் அடி விழுந்தது. சட்டையும் கிழிந்தது. ஆத்திரமடைந்த முத்துச்செல்வம் மைக்கை உடைத்து அ.தி.மு.க., கவுன்சிலர்களை தாக்க முற்பட்டார்.
மேயர், துணைமேயர், கமிஷனரிடம் கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால், மாண்புக்குரிய மாநகராட்சி சபை சந்தைக்கடை போல, கடும் கூச்சல், குழப்பத்துடன் காணப்பட்டது. மற்ற தி.மு.க., கவுன்சிலர்கள், முத்துச்செல்வத்தை அமைதிப்படுத்தி அமர வைத்தனர்.
தொடர்ந்து பேசிய கோட்டத்தலைவர் சீனிவாசன், ""பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக்கூட்டத்தில், தமிழக மக்களின் நலனுக்காக, பேச முற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியையும் வன்மையான கண்டிக்கிறோம்,'' என்றார்.
இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே செல்லும்போது முத்துச்செல்வம் கதவை ஓங்கி அடித்துவிட்டு சென்றார். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள், அவையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் நடந்த, தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகே அடுத்த கூட்டத்தில் அனுமதிக்கவேண்டும்' என்றனர்.
மேயர் ஜெயா கூறியபோது, ""தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வத்தை, ஒரு கூட்டத்தில் பங்கேற்க மேயர் ஜெயா அதிரடி தடை விதித்துள்ளார். இவ்விவகாரம், இன்று நடக்கும் கூட்டத்தில் பெரிதாக வெடிக்கும் என்று தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.