மும்பை: அமெரி்க்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் சிலர் தங்கியிருந்தனர். அப்போது அவர்களிடையே எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தாக்கி கொண்டனர். இந்த விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது.பினனர் ஓட்டல் தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க விமான ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே ஓட்டலில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். தற்போது நடந்திருப்பது இரண்டாவது முறையாகும்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம் தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 தற்காலிக ஊழியர்களும் 2 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
தற்காலிக ஊழியர்களின் இத்தகைய செயலால் விமான நிறுவனத்திற்கும் மேல் அதிகாரிகளுக்கும் அவப்பெயர் உண்டாவதாகவும், இது போன்ற நிலைமை ஏற்படாதிருக்கும் வகையில் விமான ஊழியர்கள் ,பயணிகள் நன்மையை கருதி ஒரு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பயணிகளிடம் மென்மையாக நடந்து கொள்வது, ஆடை நிர்வாகம், விமான நிறுவனத்தின் தரத்தை மேம்படுத்துவது குறித்து ஊழியர்களுக்கு மாதம் தோறும் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து மீண்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளிடையே நற்பெயரை பெறுவதற்காக மேல் அதிகாரிகள் கடினமாக உழைத்து வரும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்கள் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என கூறினார்.