திருச்சி: ஹோட்டல் சேவைக்கட்டணம் மற்றும் கால்நடை உரிமக்கட்டணத்துக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக, இரண்டு தீர்மானங்களையும் மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்தது.
திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரணக்கூட்டம், மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக் மீரா முன்னிலை வகித்தனர். திடக்கழிவுகளை கையாளுதல் தொடர்பாக உயர்ந்துள்ள செலவினங்களால், திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள ஹோட்டல், திருமண மண்டபங்களின் சேவைக்கட்டணங்கள், 100 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை, உயர்த்தும் தீர்மானம் கவுன்சில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
கோட்டத்தலைவர் சீனிவாசன் (அ.தி.மு.க.,): ஏ.ஸி., ஏ.ஸி., அல்லாத ஹோட்டல்கள், பெரிய, சிறிய ஹோட்டல்கள் என்ற பாரபட்சமின்றி, அனைத்து ஹோட்டல்களுக்கும் ஒரே மாதிரியாக சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும். கமிட்டி அமைத்து கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.
கமிஷனர்: ஹோட்டல் உரிமையாளர்கள், கவுன்சிலர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு, சேவைக்கட்டணம் முடிவுச் செய்யப்படும். தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.
கால்நடை: கால்நடைகள் வளர்ப்பவர்கள், குதிரைக்கு, 1,000 ரூபாய், மாட்டுக்கு, 500, பன்றிக்கு, 300, கழுதைக்கு, 500, ஆட்டுக்கு, 200 ரூபாய் என, மாநகராட்சிக்கு ஓராண்டு உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தீர்மானம் கவுன்சில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
கோட்டத்தலைவர் சீனிவாசன் (அ.தி.மு.க.,): உரிமக்கட்டணத்தை பொறுத்தவரை, இடங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, உரிய முறையில் பரிசீலித்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும்.
முஸ்தபா (ம.தி.மு.க.,): தமிழக அரசே மக்களுக்கு ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி வரும் நிலையில், உரிமக்கட்டணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். குறிப்பாக, பன்றி வளர்க்க உரிமக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால், பணம் கட்டி எல்லோரும் பன்றி வளர்க்க ஆரம்பித்துவிடுவர்.
கமிஷனர்: தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.
கோட்டம் "காட்டம்': கோட்டத்தலைவர் லதா (அ.தி.மு.க.,): ஸ்ரீரங்கம் கோட்டத்தில், இரண்டு டெண்டர்கள் முடிந்துவிட்டன. இதன்பின் முடிந்த டெண்டர்கள் அனைத்தும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோட்ட டெண்டர்கள் ஏன் தீர்மானமாக வைக்கவில்லை?. இதனால் மாநகராட்சிக்குதான் நஷ்டம்.
மேயர் ஜெயா: சிறிது தாமதமாகிவிட்டது. விரைவில் தீர்மானத்தில் வைக்கப்படும்.
கோட்டத்தலைவர் லதா (அ.தி.மு.க.,): தாமதம் ஏன்? என்று கேட்டால், தாமதமாகி விட்டது என்று பதில் சொல்கிறீர்கள். அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது. நீங்கள்தான் செய்யவேண்டும்.
(அ.தி.மு.க.,வை சேர்ந்த கோட்டத்தலைவர், அதே கட்சியை சேர்ந்த மேயரை பார்த்து இப்படி கேட்டதால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.)
தி.மு.க., வெளிநடப்பு!
கடந்த மாநகராட்சிக்கூட்டத்தில், சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்த தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நேற்று கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் துவங்கியவுடன், தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன் எழுந்து, ""பிரச்னைக்கு காரணமான, கோட்டத்தலைவர் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைப்பட்சமாக முத்துச்செல்வம் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்,'' என்று கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.