ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையால் ரோந்து செல்வது, பஸ் ஸ்டாண்ட் "அவுட்போஸ்ட்' திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருட்டு, பெண்களை கேலி செய்வது அதிகரித்து வருகிறது.ராமநாதபுரத்தில் டவுன், பஜார், கேணிக்கரை மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் பஜாரில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.,க்கள், ஆறு சிறப்பு எஸ்.ஐ., க்கள் உட்பட 43 போலீசார் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 32 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டவுன் ஸ்டேஷனில், ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ.,க்கள், ஆறு சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 45 போலீசார் இருக்க வேண்டும். தற்போது, 41 பேர் மட்டுமே உள்ளனர். கேணிக்கரையில் ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு எஸ்.ஐ.,க்கள், ஆறு சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 51 பேருக்கு பதில், 38 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கோர்ட், டி.ஐ.ஜி., எஸ்.பி.,அலுவலகம், போன்ற இடங்களில் சிறப்பு பாதுகாப்பு பணியிடத்திற்கு 17 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாற்றுபணிக்கும், எஸ்கார்டு செல்ல டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து ஏழு போலீசார் வீதம் அனுப்பப்படுகின்றனர். இதுதவிர விடுமுறை, கோர்ட், விழா பாதுகாப்பு பணி, என ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்தும் போலீசார் சென்றுவிடுவதால், வழக்குபதிவு, விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு ரோந்து, பஸ் ஸ்டாண்டில் "அவுட்போஸ்ட்' பணியும் இழுபறியாக உள்ளது. இதனால் ராமநாதபுரத்தின் முக்கிய இடங்களில் ரோமியோக்களின் தொந்தரவு அதிகரிப்பதும், இரவு நேரங்களில் ரோட்டை "பார்' ஆக பயன்படுத்துவதும், வழிப்பறியும் அதிகரித்துள்ளன. பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆயுதப்படை போலீசாரை, ஸ்டேஷன் தோறும் குறைந்தது எட்டு பேர் வரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய போலீசாரை நியமித்து ரோந்து பணியை அதிகரிக்க எஸ்.பி., மயில்வாகனன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.