திருநெல்வேலி: நெல்லையில் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடி எரிப்பு, மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்த 293 பேர் கைது செய்யப்பட்டனர்.காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கு தலித் அமைப்புகள், பல்வேறு கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நெல்லையில் நேற்று நடந்த அனைத்து சமுதாய பேரியக்க கலந்தாய்வுக்கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தி சில அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையொட்டி கூட்ட அரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.கமிஷனர் சுனில்குமார் சிங் உத்தரவுப்படி துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர்கள் செய்யது இப்ராகிம், அல்லித்துரை, மனோகரகுமார் தலைமையில் போலீசார் அரங்கை சுற்றி பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். போலீஸ் கண்காணிப்பை மீறி நெல்லையில் 5 இடங்களில் போராட்டம் நடந்தது.ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சி நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகவேல் ராஜன் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.முருகவேல் ராஜன் கூறிய போது, ""தலித் மக்களின் மனம் புண்படும் வகையில் ராமதாஸ் பேசி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் சமுதாய கூட்டத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும். இழந்த செல்வாக்கை நிலை நிறுத்த ஜாதி மோதல்களை தூண்டி ஓட்டு வங்கியை தக்க வைக்க ராமதாஸ் முயற்சி செய்கிறார். அவரை கைது செய்ய வேண்டும். பா.ம.க.,வை தடை செய்ய வேண்டும்'' என்றார்.கூட்ட அரங்கிற்கு எதிர்புறம் வண்ணார்பேட்டை காங்., அலுவலகம் முன்பு மள்ளர் நாடு அமைப்பினர் மாவட்ட செயலாளர் மகேஷ் மள்ளர் தலைமையில் பா.ம.க., கொடி பேனரை எரித்தனர். இதுதொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.அரங்கிற்கு வெளியே முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் செல்லப்பா தலைமையிலான 51 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில வக்கீல் பிரிவு செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் தேசம் அமைப்பை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முன்பு பல்வேறு இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் நடந்தது. தேவேந்திர மக்கள் முன்னேற்றக்கழகம் ரவி தேவேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைகண்ணன், மக்கள் விடுதலை கட்சி செய்தி தொடர்பாளர் ஜெ.பி., பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், புரட்சிபாரதம் தெற்கு மண்டல செயலாளர் பெருமாவளவன், முத்துக்குமார், ஆதிதிராவிடர் நல உரிமை சங்க பொருளாளர் சுந்தர்ராஜன், துப்புரவு பணியாளர் சங்கம் இஸ்ரவேல், அம்பேத்கர் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.டவுன் உதவி கமிஷனர் லோகநாதன், ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 125 பேரை கைது செய்தனர். கூட்ட அரங்கு முன்பு சேகர் தலைமையில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமதாஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் 5 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 293 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்ததால் நெல்லை ஜங்ஷன், வண்ணார்பேட்டையில் பதட்டம் நிலவியது. கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.