திருப்பூர்:வரும் 2013-14ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தை, புதியதாக, தரமுடையதாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
பாடத்திட்டத்தில் ஏதேனும் மாறுதல், திருத்தம் செய்ய வேண்டியுள்ளதா என்பது குறித்து, மாநிலம் முழுவதும், பணியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், துறை சார்ந்த கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், முதுகலை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப் பட்டது.
திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் அக்கூட்டம் நடத்தப்பட்டது; 200க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒரு விண்ணப்பம் வழங்கப்பட்டது. பாடத்தின் தலைப்பு; அதன் எளியத்தன்மை, கடினத்தன்மை, பழையனவற்றை நீக்க வேண்டுமா; காலத்துக்கு ஏற்ப புதியதாக ஏதேனும் சேர்க்க வேண்டுமா; ஒழுக்க நெறி; பண்பாடு; சுற்றுச்சூழல்; வாழ்க்கை திறன்; நாட்டுப்பற்று முதலிய கருத்துகள் இடம் பெறச் செய்ய வேண்டுமா; தேசிய கலைத்திட்டம் 2005 மற்றும் தமிழக கலைத்திட்டம் 2013ன் கீழ் பாடத்திட்டம் அமைந்துள்ளதா என பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டன. ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர், குழுவாக விவாதம் நடத்தி, தங்களது கருத்துகளை எழுதி விண்ணப்பங்களை அளித்தனர்.
வேதியியல், உயிரியல், விலங்கியல், உயிர்வேதியியல், மனையியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட சயின்ஸ் குரூப் சார்ந்த பாடங்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது; இன்று, ஆர்ட்ஸ் குரூப் சார்ந்த பாடங்களுக்கு கருத்து கேட்கப்பட உள்ளது. ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, பட்டியலிடப்பட்ட பின், அரசுக்கு அனுப்பப்படும்.
ஆசிரியர்கள் கூறுகையில், "புதிய பாடத்திட்டத்தில், உயர்கல்வியை தொடர்வதற்கான அடிப்படை கருத்து இடம் பெற்றுள்ளது; அடுத்த 10 ஆண்டுக்கு தேவையான வகையில் பாடத்திட்டம் தயாராகியுள்ளது. மேல்நிலைக்கல்வி முடித்து, உயர்கல்வி தொடர இயலாதவர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய வகையிலும் பாடத்திட்டம் அமைந்துள்ளது,' என்றனர்.