புதுடில்லி: கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இத்தகைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மனிஷ் திவாரியின் இந்த கருத்துக்கு, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு அமைப்பு உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் தான் இது போன்ற சந்தோஷமான செய்தியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இனிமேல் படம் எடுக்கும் முன்னர் எல்லா சமூகத்தினரிடமும் அனுமதி வாங்கிய பின்னரே படம் திரைக்கு வர வேண்டும். தீவிரவாதிகளை பற்றி படம் எடுத்தால் அவர்களின் சமூகத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் அவர்களால் கூட சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்ப்படுத்த முடியும். இனி திரைப்படம் எடுப்பதற்கு முன்னர் எதைப்பற்றி எடுக்கவேண்டும், என்ன கருத்து சொல்லமுடியும் என்பதெல்லாம் ஒவ்வொரு சமூகத்தினரும் தீர்மானிப்பார்கள்.
தணிக்கைக்குழு அனுமதித்தபின் திரைப்படத்தை திரையிட அரசோ நீதிமன்றமோ தடை விதிக்கக்கூடாது என்ற வாதம் ஏற்கக்கூடியதல்ல. ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள் .விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் இஸ்லாமியர்களால் எழுப்பப்பட்டுள்ளது தங்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக திரைப்படத்தில் காட்சிகள் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.அந்த சிறுபான்மையினரின் உணர்வுகளை எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க வேண்டியது அரசின் கடமை.அப்போது தணிக்கைத் துறையால் என்ன செய்ய முடியும்? .எனவே அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பது தவிர்க்க முடியாதது .ஆனால் அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.அதை கண்காணிக்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒருவேளை தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அது பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருந்தால் நிச்சயமாக அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.