Pottu suresh murdered in madurai | "பொட்டு' சுரேஷ் கொடூரமாக வெட்டிக் கொலை : மதுரையில் பயங்கரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"பொட்டு' சுரேஷ் கொடூரமாக வெட்டிக் கொலை : மதுரையில் பயங்கரம்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"பொட்டு' சுரேஷ் கொடூரமாக வெட்டிக் கொலை :  மதுரையில் பயங்கரம்

மதுரை: தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரிக்கு நெருக்கமானவருமான "பொட்டு' சுரேஷ் என்ற என். சுரேஷ்பாபு,46, நேற்றிரவு 8 மணிக்கு, மதுரை சத்யசாய் நகரில், அவரது வீடு அருகே, மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு 7.40 மணிக்கு மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள தன், "யோகா கன்ஸ்டிரக்ஷன்ஸ்' அலுவலகத்திலிருந்து, "ஸ்கோடா' காரில்( டி.என்.59 ஏ கியூ 6789), சத்யசாயிநகரில் உள்ள வீட்டிற்கு பொட்டு சுரேஷ் புறப்பட்டார். காரை டிரைவர் மணி ஓட்டினார். ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட்- டி.வி.எஸ்., நகர் பாதையில், முருகன் கோயில் சந்திப்பு அருகே கார் வந்த போது, இரவு 8 மணிக்கு, எதிரே சிகப்பு கலர் "அப்பாச்சி' பைக்கில் வந்த இருவர், மோதுவது போல் போக்கு காட்டி கடந்து சென்றனர். டூவீலரின் பதிவு எண் தெரியவில்லை. அப்போது, திடீரென டாடா "ஏஸ்' வாகனத்தில் வந்த, ஏழு பேர் கும்பல், சுரேஷ் காரின் முன்பகுதியில் மோதியது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கார் கதவை திறந்து வெளியே வர முயலும் போது, மர்மகும்பல் வெட்டியது. பின், அவரை வெளியே நடுரோட்டிற்கு இழுத்த அக்கும்பல், சரமாரியாக தலை, முதுகு, கழுத்து என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். இதைதொடர்ந்து, அக்கும்பல் தலைமறைவானது. இச்சம்பவம் நடந்த, 10 நிமிடங்களுக்கு பிறகே போலீசிற்கு தகவல் தெரிந்தது. துணைகமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார், டிரைவர் மணியிடம் விசாரிக்கின்றனர்.

"ஈகோ' பிரச்னையா? : "பொட்டு' சுரேஷிற்கும், கடந்த ஆட்சியில் அழகிரிக்கு நெருக்கமானவராக இருந்த ஒருவருக்கும் அதிகாரம் செய்வது தொடர்பாக "ஈகோ' பிரச்னை இருந்தது. நாளடைவில், கட்சியில் இருந்தும், அழகிரி நட்பு வட்டாரத்தில் இருந்தும், அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு, "பொட்டு' சுரேஷ்தான் காரணம் என அவரது ஆதரவாளர்கள் கருதினர். இதனாலேயே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும், கான்டிராக்ட் எடுப்பது தொடர்பான போட்டி காரணமாக, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பகை போன்ற காரணங்களாலும் கொலை செய்யப்பட்டிருக்கலாமா எனவும் விசாரணை நடக்கிறது. மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொட்டு சுரேஷூக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

சுரேஷ் பாபு-"பொட்டு' சுரேஷ் ஆனது எப்படி?


கடந்த 2006க்கு முன் வரை, மதுரை டவுன்ஹால் ரோட்டில்<, சிப்ஸ் கடை நடத்தி வந்தவர், சுரேஷ்பாபு. "எந்த நேரத்திலும் தனது பிளாட்பார கடையை எடுத்துச் சென்றுவிடுவார்களோ' என, போலீஸ் மீது, எப்போதும் இவருக்கு பயம் இருந்துக் கொண்டே இருந்தது. இதைப் போக்க, தி.மு.க., அனுதாபியான இவர், குட்டி அரசியல்வாதிகளுடன் பழக ஆரம்பித்தார்.
நாளடைவில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு ஏற்கனவே "கிரம்மர்' சுரேஷ் என்ற விசுவாசி இருந்ததால், பெயர் குழப்பத்தை தவிர்க்க, "எப்படி அழைப்பது?' என, குழப்பத்திற்கு ஆளானார் பி.டி.ஆர்., சுரேஷ்பாபு நெற்றியில் பொட்டு வைத்திருந்ததால், "பொட்டு' என்று அழைக்க, அதுவே அடையாளப் பெயராகிவிட்டது. பழனிவேல்ராஜன் மறைவிற்கு பின், அழகிரியின் நம்பிக்கைக்கு உரியவராக மாற ஆரம்பித்தார். அவர் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்ததால், அழகிரிக்கு செல்லப்"பிள்ளையாக' மாறினார். "பொட்டு' சுரேஷின் அபார வளர்ச்சி, 2006 ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆரம்பித்தது. அதுவரை மதுரைக்கு வெளியே, யாருக்கும் இவரைத்தெரியாது. தி.மு.க., ஆட்சியில் அழகிரியின் வலதுகரமாக மாறியதால், தென்மாவட்ட "அதிகார மையமாகவே' வலம் வந்தார். மதுரை, சின்னசொக்கிக்குளத்தில் "ரியல் எஸ்டேட்' அலுவலகத்தில்தான், அப்போது எல்லா "டீலிங்' யையும்' மேற்கொள்வார். கடந்த ஆட்சியில், அமைச்சர்களே பயப்படும் அளவிற்கும், கலெக்டர்களுக்கு உத்தரவிடும் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தார். அப்போது இவர் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாதது, பெரிய பலமாக இருந்தது.

குண்டர் சட்டத்தில் கைது:
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எதிர்பார்த்தது போல், "பொட்டு' வின் அதிகார சாம்ராஜ்யம் வீழ்ந்தது. முதன்முறையாக, நில அபகரிப்பு வழக்கில், 2011 ஜூலை 19 ல், கைது செய்யப்பட்டார். ஜூலை 25 ல், மேலும் ஒரு மோசடி வழக்கில், அண்ணாநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, ஜூலை 26ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மூன்று மாதம் கழித்து, குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த அவர், பிற வழக்குகளுக்கு பயந்து, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். அழகிரிக்கு நெருங்கியவராக இருந்தும், தற்போது மதுரையில் நடக்கும் தி.மு.க., கோஷ்டி அரசியல் எதிலும் ஈடுபடாமல், தள்ளி நின்றார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள் விழாவில் கூட, கலந்து கொள்ளவில்லை. ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் பக்தரான இவர், மறைமுகமாக, பிற கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டினார். இவர் "யோகா கன்ஸ்டரக்ஷன்' பெயரில், கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். தி.மு.க., வில் தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தார்.

"பொட்டு' சுரேஷ் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு : தி.மு.க., ஆட்சியின் போது மதுரையில் எந்த நிகழ்ச்சியையும் முன்னின்று செய்தவர். அழகிரி பிறந்த நாள் விழா பேனர், பிளக்ஸ் போர்டுகளில், அழகிரி படத்துடன், பொட்டு சுரேஷ் படமும் தவறாது இடம் பெறும். இந்த முறை அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்த போர்டுகளில், பொட்டு சுரேஷ் படம் இடம்பெறவில்லை. கட்சியினர் இவரிடமும் பவ்யமாக நடப்பர். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின், நில மோசடி வழக்கில் கைதான பின், கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி வந்தார். கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் இருக்க அவர் ஒதுங்கியிருந்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.
குடும்பத்தினர்: பொட்டுசுரேஷின் தந்தை நடராஜன் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தாயார் கற்பகம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர்கள் குடும்பம், பல ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் குடிபெயர்ந்தது. பொட்டுசுரேஷூக்கு அண்ணன்கள் குமார், அசோகன், தம்பி சரவணன் உள்ளனர். குமார் ஆஸ்பத்திரி மேலாளராகவும், அசோகன் டிராவல்ஸ் உரிமையாளராகவும், சரவணன் வக்கீலாகவும் உள்ளனர். பொட்டுசுரேஷ் மனைவி ரோகிணிமீனாள். மகள் ஸ்ரீவர்ஷினி, டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 2010ல் இவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், கதவு சேதமானது. . யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வழக்குபதிவு செய்யப்பட்டும் யாரும் கைதாகவில்லை. இதனால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைலி, தலைப்பாகை கொலையாளிகள் யார் :
20 கி.மீ., வேகத்தில் வந்து கொண்டிருந்த "பொட்டு' சுரேஷின் காரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, கொலையாளிகள் திட்டமிட்டு பைக்கில் வந்து மோதுவது போல் வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தப்படியே காரை, சுரேஷின் டிரைவர் மணி நிறுத்தினார். பைக்கை பின்தொடர்ந்து, "டாடா ஏஸ்' வண்டியில், கைலி, தலைப்பாகை கட்டு அணிந்து வந்த கும்பல், சுரேஷின் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் வெட்டினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் "டேய்... என்னடா பண்றீங்க' என சத்தம்போட, கும்பல் அவரை வெட்டி கொன்று தலைமறைவானது.
இதைதொடர்ந்து, அனைத்து செக்போஸ்ட்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து ஓடிய மோப்ப நாய், பழங்காநத்தம் மேம்பாலம் கட்டும் இடம் வரை சென்றுவிட்டு திரும்பியது. கொலையாளிகளை பிடிக்க 5க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அழகிரி "ஷாக்' :
நேற்று முன் தினம் பிறந்தநாளை கொண்டாடிய அழகிரி, நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், "பொட்டு' சுரேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அழகிரி, மதுரை நிர்வாகிகளிடம் போனில் விபரங்களை கேட்டறிந்தார். சில நிர்வாகிகள், நேரில் விளக்குவதற்காக, காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். இன்று, அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி மதுரை வரவுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் சுரேஷ் உடல் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை தி.மு.க.,வை உலுக்கிய கொலைகள் : மதுரை: மதுரையில் தி.மு.க., பிரமுகர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது தொடர் கதையாகிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு, தொண்டரணி அமைப்பாளராக இருந்த சவுரிமுத்து கொலை செய்யப்பட்டார். 2003 மே 21ல் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார். தற்போது பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar M - chennai ,இந்தியா
03-பிப்-201317:38:54 IST Report Abuse
Shankar M ஏழாண்டு வளர்ச்சி பாழாகிப்போன வாழ்க்கை. சட்டத்திற்கு பயந்து வாழ்ந்த சராசரி மனிதனை அரிசியல் எந்த அளவிற்கு உயர்த்தி எப்படி வீழ்த்தியிருக்கிறது என்பதை அராஜக அரசியல் செய்பவர்கள் இனியாவது உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
deivasigamani - Erode,இந்தியா
02-பிப்-201309:56:12 IST Report Abuse
deivasigamani பொட்டு சுரேஷ் ஒரு ரவுடி என்பது அனைவருக்கும் தெரியும். இவனால் பாதிக்கப்பட்ட ஒருவன் தான் இதை செய்திருக்க வேண்டும். இதையே சினிமா வில் செய்தால் - வில்லன் கொல்லப்பட்டால் ஆடியன்ஸ் அதை பார்த்து கை தட்டுவார்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. முன்னாள் முதல்வரும் இந்நாள் மந்திரியும் வந்து மரியாதை செலுத்துகின்றனர். அதை சமூகம் அங்கீகரிக்கின்றது பத்திரிக்கைகள் டிவிக்கள் இதற்கு தலைப்பு செய்தி தருகின்றனர். ரவுடி யின் குடும்பத்தை பார்த்து அனுதாப படவேண்டும் அது மட்டுமல்ல அந்த குழந்தைகள் நன்றாக வாழ நல்லர்வர்களாக வாழ சமுதாயம் வழி விட veyndum
Rate this:
Share this comment
Cancel
Sudhakar - Edison,யூ.எஸ்.ஏ
02-பிப்-201305:35:06 IST Report Abuse
Sudhakar 2006 இல் சிப்ஸ் கடை ....அப்புறம், ஜெயிலில், அப்புறம் கடந்த ஆட்சியில், அமைச்சர்களே பயப்படும் அளவிற்கும், கலெக்டர்களுக்கு உத்தரவிடும் சக்தி வாய்ந்த நபராக வலம் அப்போது இவர் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாதது, ...இதெல்லாம் INDIA ல தான் பா POSSIBLE.....GOOD LUCK INDIA...இதெல்லாம் நம்ப ஊர்ல சகஜம் , ஆனா சினிமா ல மட்டும் கரெக்டா இருக்கணும் ...இல்லேன்னா நம்ம மக்க அரசனையும் ஆண்டியா ஆகிடுவாங்க...
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Moorthy - madurai,இந்தியா
02-பிப்-201303:06:10 IST Report Abuse
Ganapathy Moorthy தா .பாண்டியன், ஆலடி அருணா, ராமஜயம், வரிசையில் தற்போது அண்ணன் பொட்டு சுரேஷ் இயற்க்கை எய்தினார் -மதுரை -கைபுள்ளை ரசிகன்
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
02-பிப்-201301:52:47 IST Report Abuse
ganapathy ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற பட்டினத்தாரின் சொல் இணைவுக்கு வருகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான். இவர் குழந்தை பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Alfaz - Chennai,இந்தியா
02-பிப்-201300:00:23 IST Report Abuse
Alfaz இப்படி பொட்டுனு போட்டு தள்ளிடாங்க்லே
Rate this:
Share this comment
Cancel
KavignarMagan - singapore,சிங்கப்பூர்
01-பிப்-201321:43:50 IST Report Abuse
KavignarMagan கத்தியை எடுத்தவன் கத்தியால் பாதிக்கப்படுவான் என்பது சொலவடை. அது நிரூபணம் ஆகிறது. ஆனால் பாவம் குடும்பமும் குழந்தைகளும். நெஞ்சம் பதறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-201320:36:53 IST Report Abuse
mk என்னது, அவரது மனைவியும் உறவினரும் கதறினாங்களா..?? அவரால, எத்தனை மனைவிமார்கள் எத்தனை உறவினர்கள் எத்தனை குடும்பங்கள் கதறிருக்கும்...!! நீங்க என்ன சாபம் விடுறது, பாதி்க்கப்பட்ட பல குடும்பங்களின் சாபம் தான் இந்த அளவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கு..!!! ஒரு சாதாரண, ரோட்டோர சிப்சு கடைகாரர் இப்போ ச்கோடா காரில் போறாரு.. இவரு என்ன சிப்சு விற்றா முன்னேறுனாரு..?????
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
01-பிப்-201320:18:28 IST Report Abuse
Peria Samy பொட்டு சுரேஷின் பரிதாப முடிவு மிகவும் கொடூரமானது.அதிகார மையத்திடம் நெருக்கமாக இருந்தபோது அவர் எத்தனை பேரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாரோ.,பாதிக்கப்பட்ட யாரோ ஒரு நல்லவரின் சாபம் அவரை வீழ்த்தி விட்டது.அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.அடுத்த பிறவியிலாவது நல்லவரா பிறந்து நல்லவராய் வாழட்டும்.அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bala - madurai,இந்தியா
01-பிப்-201319:21:23 IST Report Abuse
Bala ஒரு தாய் மகன் தான்நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் .. பாரடா என்ன தான் அவரு ஒரு ரெளடியாக இருந்தாலும், ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை
Rate this:
Share this comment
ezee madrasee - Leamington Spa,யுனைடெட் கிங்டம்
02-பிப்-201308:34:15 IST Report Abuse
ezee madraseeஇவனுங்க மத்தவங்கள செஞ்சா சரி ... இன்னொருத்தன் இவனுங்கள செஞ்சா தப்பா.... இன்னும் கொடியவர் பலர் வீழ இறைவனை வேண்டுகிறேன் . .. ஜெய் ஹிந்த்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை