திண்டிவனம்: ஆள் மாறாட்டம் செய்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மூவருக்கு, இரு சட்டப் பிரிவுகளில் தலா, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டிவனம் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கடந்த சட்டசபை தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட, காலாப்பட்டு தொகுதியில், என்.ஆர்.காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையில், கல்யாணசுந்தரத்திற்கு கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, 10ம் வகுப்பு தனித் தேர்வில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்வு எழுத, திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.
திண்டிவனம் ஜெயபுரம் பகுதியில் உள்ள, தாகூர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வு எழுத, அவருக்கு அனுமதிக்கப்பட்டது. கல்யாணசுந்தரம், செப்., 29ம் தேதி அறிவியல் தேர்வை எழுதியதாகவும், 30ம் தேதி சமூக அறிவியல் தேர்வு எழுத வரவில்லை எனவும் புகார் எழுந்தது.
ஆனால், 29ம் தேதி கல்யாணசுந்தரம் தேர்வு எழுதவில்லை; ஆள் மாறாட்டம் செய்து, வேறு ஒருவர் தேர்வு எழுதியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அரசு உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழு, விசாரணை நடத்தியது.இதில், கல்யாணசுந்தரம் போலி முகவரி கொடுத்து, அடையாளச் சான்று பெற்றது தெரிய வந்தது. அந்த முகவரியில், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆதவன் வசிப்பதும், ஆதவன், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விடுப்பு பெறாமல், கல்யாணசுந்தரம் தேர்வு எழுதிய அறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அப்போதைய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதில், கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர் ரஜினிகாந்த் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.அதன் பேரில், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட, மூன்று பேர் மீதும், எட்டு பிரிவுகளில்
போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்யாணசுந்தரத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் தரப்பில் இரண்டு முறை சம்மன் கொடுத்தும் அவர் வரவில்லை.இதையடுத்து, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர்நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பினர். இதன் பின், கல்யாணசுந்தரம், கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், கல்யாணசுந்தரம், முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் கல்யாணசுந்தரம். இதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் சார்பில், திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு செப், 5ம் தேதி முதல், சாட்சிகளிடம் விசாரணை துவங்கியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, வழக்கு விசாரணை அதிகாரியான, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட, 57 பேர், அரசு தரப்பில் சாட்சியம் அளித்தனர்.
வழக்கு விவரங்கள் குறித்து, மாஜிஸ்திரேட்டிற்கு எழுந்த சந்தேகங்களுக்கு, கல்யாணசுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவரங்களை அளித்தனர். இறுதியாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Advertisement
நேற்று, காலை 10 மணிக்கு முன்பாக கல்யாணசுந்தரம் தரப்பினர் வந்திருந்தனர். எனினும் மாலை 3 மணிக்கு கோர்ட் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.மாலை 5.30 மணிக்கு, மாஜிஸ்திரேட் சரிதா, வழக்கின் தீர்ப்பை வாசித்தார்.தீர்ப்பு விவரம்: கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன், ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும், கூட்டுச்சதி, போலியானஆவணங்களை தயாரித்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய, நான்கு பிரிவுகளின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம், ரஜினிகாந்த், ஆதவன் ஆகிய மூன்று பேரும், இரு சட்டப்பிரிவுகளில் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மூவரும் தலா, 5000 ரூபாய் அபராதமும் செலுத்தவேண்டும். அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு மாஜிஸ்திரேட் சரிதா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அரசு வழக்கறிஞர் அம்ஜத்அலி ஆஜராகி இருந்தார். கல்யாண சுந்தரம் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்பட்ட புகார் நீக்கப்பட்டது.
தீர்ப்பை அடுத்து, மூவரும்,தலா ரூ.10,000க்கு சொந்தஜாமினும், ரூ.5,000க்கு தனி நபர்ஜாமினும் கேட்டு, மனு செய்தனர்.அவர்களை ஜாமினில் விடுவித்தநீதிபதி, மேல் முறையீடு செய்ய,பிப்., 20ம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்து, அதுதொடர்பான விவரங்களை,கோர்ட்டில் பதிவு செய்யுமாறுஉத்தரவிட்டார்.